அன்றைய சர்ஜரி செய்தது அந்தத் துறையின் மிக மூத்த சர்ஜனும் தலைமை மருத்துவரும் ஆவார். சர்ஜரி நீண்ட நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
“சர்ஜரி செய்ய நல்ல அஸிஸ்டன்ட் மிகவும் முக்கியம். நான் இன்று மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கேன் போலும். நீ எனக்கு அசிஸ்ட் செய்கிறாய்” என்று ஆபரேஷன் நடந்து கொண்டிருந்த போதே சீப் சர்ஜன் சிலாகித்தார்.
அப்போது சர்ஜரியின் மிக முக்கியமான கட்டம். பைபாஸ் மெஷின் எனப்படும் செயற்கை கருவியையும் நிறுத்தி இதயத்தினுள் சர்ஜரி செய்ய வேண்டும். கிட்டதட்ட மரணத்தின் வாசலில் சென்று நிற்பதைப் போல. சரியாக முப்பது நிமிடங்களுக்குள் சர்ஜரி செய்து ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இல்லையென்றால் நோயாளி உயிர் பிழைப்பது அரிதாகி விடும் என்ற நிலை.
அந்தக் கட்டத்தை அப்போது தான் தொடங்கி ஒரு ஐந்து நிமிடம் கடந்திருந்தது. அந்த மூத்த சர்ஜனுக்கு சற்றே கைகள் நடுங்க தலை சுற்றுவது போல இருந்தது. அவரது இத்தனை வருட அனுபவத்தில் முதல் முறையாக இப்படி நடக்க எதிரே நின்று கொண்டிருந்த ஹர்ஷாவைப் பார்த்தார்.
ஏதோ சரியில்லை என்று அவன் புரிந்து கொண்டான். ஏற்கனவே இந்த சர்ஜரி செய்த அனுபவம் அவனுக்கு இல்லை தான். எனினும் இன்று இந்த சர்ஜரி நடைபெற இருப்பதால் அது குறித்து விரிவாக படித்தறிந்து தனது மனதிலேயே அவன் அந்த சர்ஜரியை பல முறை செய்து பார்த்திருந்தான்.
நான் செய்து முடிக்கவா என பார்வையாலேயே அவரது அனுமதி வேண்டி அவர் சம்மதிக்க இருபது நிமிடங்களில் அந்த சர்ஜரியை மிகத் துல்லியமாக செய்திருந்தான்.
மூத்த பேராசிரியர் அவர். எத்தனையோ சர்ஜரிகள் செய்த உலகத்தில் பிரசித்தி பெற்ற சர்ஜன் அவர். அவரது அனுபவத்தில் எத்தனையோ மாணவர்களைப் பார்த்திருக்கிறார். ஆனால் ஒரு முதலாம் ஆண்டு மாணவன் இத்தனை சிறப்பாக செய்தது அவரை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இடைவேளை இன்றி நீண்ட நேரம் சர்ஜரி செய்த காரணத்தால் அவரின் சுகர் அளவு குறைந்து மயக்கத்தை ஏற்படுத்தியதை பின்பு அறிந்து கொண்டவர் இனி சர்ஜரி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.
ஹர்ஷாவை அவரது வலது கரம் ஆக்கிக் கொண்டவர் அவனுக்கு பல நுணுக்கங்களையும் கற்பித்தார். ஹர்ஷாவும் மிகுந்த சிரத்தையுடன் கற்றுக் கொண்டான். அவரது மேற்பார்வையில் தனியாகவே சிக்கலான சர்ஜரிகள் செய்யும் திறமை பெற்றான்.
அந்த இதய அறுவை சிகிச்சைப் பிரிவில் ஹர்ஷா என்றால் அனைவருக்கும் ஒரு மரியாதை. மரியாதை என்பதைக் காட்டிலும் ஒரு அபிமானம்.
மற்ற பயிற்சி மாணவர்களும் கூட எந்த வித போட்டி பொறாமை இன்றி ஹர்ஷாவிடம் விவாதிப்பதும் ஆலோசனை செய்து கொள்வதுமாய் இருந்தனர்.
ஒருவரிடம் திறமை இருந்தால் அதை அங்கீகரித்து அவரிடம் இருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் பாங்கு அங்கிருந்தோருக்கு இருந்தது.
ஹர்ஷாவின் பெயர் நீளமாக இருந்ததால் அங்கே பதிவேடுகளில் சுருக்கமாக ஆங்கில முதல் எழுத்துக்களை சேர்த்து எழுத அதுவே அவனை அழைக்கும் பெயராக மாறிப் போனது.
பூர்விக்கு மீண்டும் பசிப்பது போல இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். ஒன்பது மணி கூட ஆகவில்லை. மதியம் ஆகிவிட்டதோ என்றல்லவா நினைத்திருந்தாள்.
மறுபடியும் போய் ஏதேனும் சாப்பிடலாமா என்று அவள் ஆலோசித்துக் கொண்டிருந்த போதே ஹர்ஷா அங்கே வந்து சேர்ந்தான்.
யாரிடமோ ஏதோ விவாதித்துக் கொண்டே வந்தவன் இவளைப் பார்த்ததும் அவர்களை அனுப்பிவிட்டு இவள் முன் வந்து நின்றான்.
பூர்வி தானாக எழுந்து நின்று அவனது அடையாள அட்டையை உற்று நோக்கினாள்.
“பேரை பார்த்தா இந்தியா போல தெரியுதே” இப்போதும் சத்தமாக தான் சொன்னாள்.
அவன் பதிலேதும் சொல்லாமல் அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது சரியாக அவனது அலைபேசி இனிய ராகம் இசைத்தது.
“இளைய நிலா பொழிகிறது, இதயம் வரை நனைகிறது உலாப் போகும் மேகம் கனாக் காணுமே, விழாக் காணுமே வானமே”
அந்த தடிமனான மூக்குக் கண்ணாடியில் இருந்து வெளியே குதித்து விடுவோம் என்பது போல் அவளது விழிகள் ஆச்சரியத்தில் அகலமாக விரிந்தன.
தமிழ்ப் பாடல் அதிலும் இந்தப் பாடலை அவனது ரிங்டோனாக கேட்டு வியப்பின் உச்சிக்கே சென்றாள்.
அவன் போனை எடுத்து அப்போது தான் ஆன் செய்திருக்க, “அண்ணா, நீங்க தமிழா” என்று அவள் உற்சாகமாக கேட்டது எதிர்முனையிலும் ஒலித்தது.
சட்டென இயல்பாக அண்ணா என்று அவள் அழைத்து விட்டிருந்தது ஹர்ஷாவை ஏதோ செய்தது. ஒரு இனம் புரியாத பாசம் அவனுள் சுரந்தது.