(Reading time: 9 - 18 minutes)

"மச்சி .. கார்கி ..கண்ணை திற  .. ஒன்னும் இல்லை .. மழை இல்ல .. இங்க பாரேன் .. டேய் .. கண்ணை திற  மச்சான் " என்று கதிரும் பிரபாவும் பேசிக்கொண்டே இருக்க கண்களை இருக்க மூடி இருந்தவனுக்கோ தனது நண்பர்கள் எங்கேயோ அழைத்து செய்கிறார்கள் என்பது மட்டுமே உறைத்தது . இருப்பினும் அந்த குளிர் காற்றின் தாக்கமும்  மழையின் வாசமும் அவனது உணர்ச்சிகளை கூறுபோட்டு , கொண்டிருந்தன . "டேய் பிரபா .. கதிர் .. மழை வேணாம்டா .. " என்று இறைஞ்சும் குரலில் சொன்னவனை இறுக  அணைத்து  கொண்டான் கதிரவன் ..

அந்த அறையின் கதகதப்பும், பிரபஞ்சனின் கையில் இருந்த தேநீரின் வாசமும் கார்முகிலனை நிதானப்படுத்தியது . அதை உணர்ந்து கதிரவனும் தனது அணைப்பின் இறுக்கத்தை தளர்த்தினான் . மூவரின் மனதிலும் பாரம் ஏறிக்கொண்டது . அந்த குளிருக்கும், நடந்த போராட்டத்திற்கும் பிரபஞ்சன் கொடுத்த தேனீர் அமிர்தமாக இருந்துச்சு.

"டீ  செம்ம மச்சான் .." மௌனத்தை களைத்தான் கார்முகிலன் .

"அது காபிடா கார்கி"  என்று பிரபா சிரிக்காமல் சொல்லவும் கார்கியின் முகம் அஷ்டகோணல் ஆனது .

"டேய் " என்று அவன் குறைக்கவும்

"ஹா ஹா கூல் மச்சி .. நீ தெளிவா இருக்கியானு செக் பண்ணேன் .. 200% நல்லாவே இருக்க"

" எப்படிடா சரியான நேரத்தில் வந்திங்க ? " என்று கார்முகிலனும் கேட்கவில்லை, அவர்களும் பதில் கொடுக்கவில்லை . இது அவர்களுக்கு புதிதில்லையே !

"பிரபா , இன்டெர்வியு எப்படி ?" என்று அப்போதுதான் ஞாபகம் வந்த பாவனையில் கதிரவன் கேட்க,

"அதெல்லாம் மனோ பாத்துக்கிட்டான் .. ரெண்டு பேரை செலெக்ட் பண்ணிருக்கோம் "

" அதில் நித்யாவும் இருக்காங்க" என்றான் பிரபஞ்சன் .

"நித்யா ..? அவளையா சொல்லுற ? ஆளு எப்படிடா நம்பி வேலை கொடுக்கலாமா ?" என்று சிந்தனை படிந்த முகமாய் கேட்டான் கார்முகிலன் .

"நீ ஏன்  கவலைபடுற ? நீ இருக்குற இடத்தில் அவ இருக்க மாட்டேன்னு போயிட்டா " என்று கதிரவன் உண்மையை போட்டு உடைத்தான் ..

"டேய் , ஏன்டா கதிரா ?" என்று பிரபா இழுக்க , தான் செய்தது சரிதான் என்பது போல, சிரித்தான் கதிரவன் . உண்மையிலேயே நித்யாவை பற்றி  பேசியதும் கார்முகிலனின் நடுக்கம் மொத்தமாய் விலகி ருத்ரமூர்த்தி ஆகி இருந்தான் . இப்போதைக்கு இது போதும் என்றே  தோன்றியது .

அட பத்த வெச்சுட்டியே கதிரவா  !

"என்ன திமிரு பாரேன்.. என்னவோ போடா அந்த பொண்ணை எனக்கு புடிக்கவே இல்லை !" என்றான் கார்கி  பட்டென.

"புடிக்காம தான் ஐ லவ் யூ சொன்னியா மச்சான் ?"வேண்டுமென்றே சீண்டியது நம்ம கதிரவனை தவிர யாராக இருக்க முடியும் .

"டேய் .. அது நான் கடுப்புல சொன்னது "

"அதுக்கென்ன .. அந்த பொண்ணோட அட்ரஸ் தரேன்.. நாளைக்கு ரொமாண்டிக் மூட்ல சொல்லிடு "

"டேய் பிரபா , உலகத்துல ஒரு புதுமை நிகழ்த்திய புண்ணியம் உனக்கு சேரும், தயவு செஞ்சு ருத்ராவை வெச்சுஇவன் கழுத்துல  தாலிய கட்ட வைடா " என்று கார்கி  பாவமாக சொல்லவும்,

"டேய் "என்று பதிலுக்கு அவன்மீது பாய்ந்தான் கதிரவன். சற்றுமுன் இருந்த இறுக்கநிலை மொத்தமாக மாறி இருக்க , நண்பர்கள் இருவரும் அடித்துக் கொள்ளும் கண்கொள்ளா காட்சியை கண்களில் நிரப்பி கொண்டு நின்றான் பிரபஞ்சன் . சண்டை ஓய போகும் நேரத்தில் , தன் பங்கிற்கு அவர்களை வம்புக்கு இழுத்து மூவரும் அடித்து பிடித்து உருண்டு பிரண்டு , ஒரு கம்பெனிக்கு முதலாளி என்ற நிலையை மறந்து சிறார்கள் போல மாறியிருந்தனர்.

மேல்தளம், கீழ்த்தளமென  இரண்டு வீடுகளாக பிரிந்திருக்கும், அந்த வீட்டினுள் விடுவிடுவென நுழைந்தாள்  நித்யா.  முகத்தில் பரவியிருந்த சிகப்பு நிறம் குறைந்த பாடில்லை. அலட்சியமாக கால் செருப்பு உதறிவிட்டு குளிர்சாதன பெட்டியை தேடி ஓடினாள் . அரை பாட்டில் குளிர்ந்த நீர் அவளை கொஞ்சமாய் சமன்படுத்தியது .

"நித்யா" ஆணின் கணீர் குரல் ஒலிக்க  , அந்த குரலுக்கு பதில் அளிக்க கூட மனமில்லை அவளுக்கு.

"நித்யா .. வந்துட்டியாம்மா ? என்னாச்சு ?" மீண்டும் குரல் கேட்க, அந்த குரலுக்கு உரியவருக்கு பதிலை கொடுக்க தோன்றாமல் பூட்டியிருந்த மேல் மாடி வீட்டிற்கு சென்றாள் . துப்பட்டாவால், முகத்தை பாதி மறைத்து கட்டி கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் . எதிர்பார்த்தா அளவிற்கு இல்லையென்றாலும் பூட்டி இருந்த வீடு என்பதை பறைசாற்றும் அளவிற்கு தூசியாகவே இருந்தது . எதை தேடுகிறோம் என்பது புரிந்தவளுக்கு எங்கு தேடுவது என்றே புரியவில்லை.. வீட்டையே ஒருவழியாக்கியவளின் கைகளில் அதுவரை கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்த அந்த புகைப்படம் கிடைத்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.