(Reading time: 17 - 33 minutes)

“பண்றது எல்லாம் பண்ணிட்டு பத்தினி வேஷம் போடுறீயா?” என்று தானே கொள்ளியை எடுத்து எரியூட்ட வந்தார் பார்வதி. நடக்கவிருப்பதை ஏற்றவளாய், கண்களை மூடி கரத்தினை குவித்து, தன் இறைவனை மனதில் நிறுத்தி அவன் நாமத்தை உச்சரித்தாள் தர்மா, “சிவம்!”. பார்வதி சிறிதும் இரக்கமின்றி விறகினை எரியூட்ட அதுவும் எரிய ஆரம்பித்தது. சிறிது சிறிதாக தீ மேல் எழும்பி தர்மாவை அடையும் முன்பே, அவளை அடையவிடாமல் சீறியது வானம்!! கருமேகம் சூழ்ந்துவிட, வீசிய காற்றும், கொட்டிய மழையும் ஈசனின் கவசமாய் அவளை காத்து நின்றன. தன் தண்டனையிலிருந்து அவள் தப்பித்த வெறியில் அருகிலிருந்த அரிவாளை எடுத்து அவள் சிரம் கொய்ய வந்தார் பார்வதி.

தாயின் உக்கிரநிலை அவளை அச்சமூட்டியது. அரிவாளோடு வந்தவரை இடைமறித்தார் நவீன்குமார்.

“அண்ணி! அங்கிருந்து எழுந்திருங்க அண்ணி!” கதறினார் அவர். எதிர்நோக்கா இந்த அறிமுகம் அவளை மேலும் உறைய வைத்தது.

“அண்ணியா?யார் யாருக்காடா அண்ணி?” சீறினார் பார்வதி.

“இவங்கதான்!இந்தத் தர்மாவுக்கும், என் அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு! என் அம்மா தன்னுடைய மூத்த மருமகளுக்காக கொடுத்துட்டு போனத் தாலி இவங்க கழுத்துல இருக்கு!அதனால, இவங்க வயிற்றில் வளர்கிற குழந்தை வெறும் இருட்டுக்கு சாட்சியாகி உருவாகலை!” தனக்காக ஒலித்த குரலில் நெகிழ்ந்துப் போனாள் அவள்.

“என்னடா பார்க்கிறீங்க?இவனை அடித்துத் துரத்துங்கடா இவனை!”சீறினார் அவர்.

“எவனாவது கிட்ட வந்தா சுட்டுவிடுவேன்!” தன் துப்பாக்கியை அவர் நீட்ட, பின்வாங்கினர் அனைவரும்!!

“நீங்க வாங்க அண்ணி!” அரணாய் ஆனார் நவீன்குமார்.

“இந்தக் குழந்தை என் அண்ணனுடையது! என் வீட்டு வாரிசு! நீங்க என்னுடைய அண்ணி!அவர் என்னப் பண்ணுறார்னு நானும் பார்க்கிறேன் வாங்க!” பாதுக்காப்பாய் அவரை அழைத்துச் சென்று காரில் ஏற்றினார் நவீன்.

“இவங்களை மெட்ராஸ்க்கு கூட்டிட்டுப்போ! எவன் என்ன கேட்டாலும் இவங்களை அந்த வீட்டோட மருமகள்னு அறிமுகப்படுத்தி வை! நான் வரேன்!நீங்க கவலைப்படாம போங்க அண்ணி!” என்று அனுப்பி வைத்தார் நவீன்குமார்.

தனது இல்லத்தில்..

“உங்க குழந்தையை நான் சுமந்துட்டு இருக்கேன்!” தர்மா கூறியது மீண்டும் மீண்டும் செவியில் உரைத்து அவர் நெஞ்சை கீறியது.

“அனைத்திற்கும் என் சுயநலமே காரணம்! என்னை விரும்பியதை தவிர எக்குற்றமும் அவள் புரியவில்லை. நான் சென்றாக வேண்டும்!” எழுந்துக் கிளம்பினார் அவர்.

“எங்கே போற?”மதுமதியின்  குரல் அவரை தடுக்க முற்பட சட்டென நினைவு வந்தது தர்மாவிடம் அவள் புரிந்த செயல். ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தவர் அவள் கேசத்தைப் பற்றி,

“நான் திரும்பி வருவதற்குள்ளே நீ இங்கிருந்து கிம்பலைன்னா உனக்கு சமாதிக் கட்டிவிடுவேன்!” என்று அவளை கீதே தள்ளினார்.

“என்னிக்கும் நீ தர்மாவுடைய காலடி மண்தான்!அவ காலடியில தான் இருந்தாகணும்!”என்று பார்வதியின் இல்லம் நோக்கி தன் தர்மாவை அழைத்துவர புறப்பட்டார். ஊரார் முன்னிலையில் ஏற்பட்ட அவமானம், அழற்சி பார்வதியின் புத்தியை முழுதுமாக மறைத்திருந்தது.

“தர்மா!தர்மா! எங்கே இருக்க? வெளியே வா!” தன்னவளுக்காக பகை என்றும் பாராமல் அந்த இல்லம் நுழைந்தார் நாராயணன்.

“தர்மா!” கூக்குரலிட்டார் அவர்.

“அவ உயிரோட இல்லை!” என்று வார்த்தையால் சுட்டார் பார்வதி.

“இந்நேரம் என் ஆளுங்க அவளைத் தேடி கொன்றிருப்பாங்க!முதல்ல வெளியே போ!” கடுகடுத்தார் அவர்.

“தர்மா எங்கே?” நாராயணனின் பார்வையில் தீ ஜூவாலைகள் பிரதிபலித்தன.

“நீ யார் அவளை கேட்க? முறைப்படியா கல்யாணம் பண்ணீங்க இரண்டுப்பேரும்!அவளும்,அவ வயிற்றில் வளர்கிற அந்த அவமானமும் இந்நேரம் எரிந்து சாம்பலாகி இருக்கும்!” என்றதும் தன்னை அறியாமல் “ஏ…!” என்று கூக்குரலிட்டு கை ஓங்கினார் நாராயணன்.

“அவ என்னுடையவள்!எனக்கு மட்டும் சொந்தமானவள்! உனக்கோ வேற யாருக்கோ அவ மேலே எந்த உரிமையும் இல்லை. அவ வயிற்றில வளர்வது என்னுடைய இரத்தம்!என் வாரிசு! அவங்களுக்கு எதாவது ஆச்சுன்னா ஒருத்தரையும் உயிரோட விடமாட்டேன்!” எச்சரித்துவிட்டு கிளம்பினார் அவர்.

மனம் போன போக்கினில் பயணித்தார்,எங்கிருக்கிறாள் அவள்??குற்றவுணர்வு மேல் எழும்ப அவள் முக தரிசனம் கண்டால் போதும் என்றிருந்தது. அவள் வழக்கம்போல் செல்லும் அனைத்து இடங்களுக்கும் சென்றார்,ஆலயம் சென்றார். எங்கும் அவளைக் காணவில்லை. இரவு சோர்ந்துப் போய் இல்லம் திரும்பினார்.

உடல் மட்டுமல்ல மனமும் சோர்ந்துவிட்டது!எங்கிருக்கிறாள் அவள்??கதறி அழுதார்.

“என்னை மன்னித்துவிடு தர்மா! என்னை மன்னித்துவிடு!எனக்கு கிடைத்த வரத்தை நான் இழந்துட்டேன்!என் தர்மாவை இழந்துட்டேன்.” நொடிந்துப் போனார் அவர்.

“அழுது என்னப் பிரயோஜனம்ணா? செய்த காரியம் எல்லாம் சரியாகிவிடுமா??ஒரு பெண்ணை எப்படி அவமானப்படுத்த கூடாதோ அப்படிப்படுத்திட்டீங்க, இப்போ வான்னு சொன்னா வருவாங்களா?” விரக்தியோடு சொன்னார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.