(Reading time: 17 - 33 minutes)

கழுத்தில் மாங்கல்யம் ஏறி இரு திங்கள் முடியப்போகிறது. தன் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் சோர்வினை தர்மா கவனிக்க மறுக்கவில்லை. மாதவியருக்கே உரிதான மாத ஓய்வும் இரு திங்களாக ஏற்படாமல் அவளை மேலும் அச்சமூட்டின. சில தினங்களாக உணவை சரிவர ஏற்கவும் இயலாமல், அடிக்கடி பசிக்கும் உணர்வும் ஏற்பட கதிகலங்கி தான் போனாள் அவள். உடல் சோர்ந்துப்போக, ஓய்வாக கட்டிலில் சாய்ந்தாள் அவள். வயிறு இன்னும் மேடாகவில்லை, அதுவே சற்று ஆறுதல் அளித்தது. இதுக்குறித்து உடனடியாக அவரிடம் உரையாட வேண்டும் என்றது மனம். எனினும் தன்னையறியாமல் தன் வயிற்றை தொட்டுப் பார்த்தாள் தர்மா. இனம்புரியா ஓர் சிலிர்ப்பு உயிரெங்கும் பரவியது.கண்கள் மூடி சாய்ந்திருந்தவள் கதவொளி கேட்டு விழி திறந்தாள்.

“பெரியம்மா உங்களை கூப்பிட்டாங்கம்மா!” என்றாள் கல்யாணி. மனதில் திக்கென்றது. மனம் ஏதோ ஊகித்திருக்கலாம். பதற்றமாகவும், பரபரப்பாகவும் மனம் உணர கட்டிலில் இருந்து எழுந்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.எவ்வளவு நேரம் அப்படி இருந்தாள் என்பது தெரியவில்லை,கண்விழித்தப்போது தாயார் வெளியே ஒரு மூதாட்டியிடம் உரையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரது முகத்தில் தெரித்த அக்னி ஜூவாலைகள் பல கதைகளைப் புனைந்தன. தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் கூறாத செய்தியை தாயாரின் முகம் கூறியது. கோபத்தில் தன் கரங்களை அவர் இறுக மூடியதை அவள் கவனிக்காமல் இல்லை.

 “நடந்தது நடந்தாச்சும்மா! விஷயம் எல்லாருக்கும் தெரியுற முன்னாடி நீங்களே பேசி முடிச்சிடுங்கம்மா! பொண்ணு சந்தோஷமா வாழட்டும்!” அறிவுறுத்தி சென்றார் அம்மூதாட்டி. பார்வதி ஒரு சொடுக்கிட அங்கிருந்த பெண்கள் கலைந்துச் சென்றனர். எவரும் அற்ற தனிமையில் தாயார் தன்னைநோக்கி ரௌத்திரத்தின் உருவாய் வருவதைக் கண்டு தர்மாவால் கண்கலங்க இயலாமல் இருக்க முடியவில்லை.

“யாரது?யாரது சொல்லுடி!” ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தார் பார்வதி. தற்போதே மயக்கம் கலைந்து எழுந்ததும் மீண்டும் தாயாரின் அறையை அவளால் தாங்க இயலவில்லை.

“யாரது சொல்லுடி!” தன் புதல்வியின் கூந்தல் பற்றி அவர் இழுக்க, வலி தாங்காமல் கதறினாள் அந்த பாதகம் அறியா அப்பாவி!!

“என்னை மன்னிச்சிடுங்கம்மா!” அவளது கண்ணீர் எவரையும் உலுக்கிப் பார்த்துவிடும். ஆனால்,அவள் தாயை அசைத்துக் கூட பார்க்கவில்லை.

“யாருடைய குழந்தையை உன் வயிற்றில சுமந்துக்கிட்டு இருக்க? அந்தச் சூர்ய நாராயணன் தானே!இல்லை,வேற எவனாவதா?”அவரின் கூற்று தர்மாவின் தன்மானத்தை சீண்டிப் பார்த்தது. சுயம் மீது கறைப்படிய கொதித்துவிட்டாள் அவள். தன் தாயைப் பிடித்துத் தள்ளினாள் அக்கன்னிகை.

“பேச தெரியும்னு என்னவெல்லாம் பேசுவீங்கம்மா? இது என்னுடைய குழந்தை! என்னுடைய வாரிசு, தர்மாவுடைய வாரிசு! முறைத்தவறி உருவான கரு இல்லை!” முதன்முறை கண்ட கோபத்தில் ஆடிப்போனார் பார்வதி.

“உன்னை நான் மன்னிக்க மாட்டேன் தர்மா! உனக்கு கடைசி வாய்ப்பை தரேன். அந்தத் தாலியை கழற்றி வீசிட்டு, இந்தக்கருவை கலைத்துவிடு! இல்லைன்னா, மற்றவங்களுக்கு தர அதே தண்டனையை ஊர் எல்லையில உன்னையும்,அவனையும் உயிரோட எரித்துவிடுவேன்.” அக்குரலில் குரோதம் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

“உங்களால அவரை எதுவு் பண்ண முடியாது! என் குழந்தை வாழப்போறவன். அந்த ஈஸ்வரன் எனக்கு கொடுத்த வரம் இவன். நிச்சயம் இவனை உங்களால அழிக்க முடியாது!” தன் வயிற்றை அழுந்தப் பிடித்தா தர்மா. தன்னை எதிர்க்கும் மகளை அடக்கிவிட உண்டான குரோதம் பார்வதியின் நரம்பெல்லாம் பரவ, பெரும் சினத்துடன் வெளியேறினார் அவர். அடுத்து என்ன செய்வதென்றே புரியாமல் நின்றவளிடம் அவசரமாக ஓடிவந்தாள் கல்யாணி.

“அம்மா! பெரியம்மா ரொம்ப கோபத்துலஇருக்காங்கம்மா! நீங்கப் போயிடுங்கம்மா!அவர்கிட்ட போயிடுங்கம்மா!எங்கேயாவது போய் சந்தோஷமா வாழுங்கம்மா!” கண்ணீருடன் மன்றாடினாள் அவள்.

“இல்லை கல்யாணி! அவங்களால என்ன முடியுமோ பண்ணட்டும்.” பிடிவாதமாக நின்றாள் அவள்.

“ஐயோ! சொன்னாக் கேளுங்கம்மா! இந்தக் குழந்தை வாழணும்! நீங்களும் சந்தோஷமா இருக்கணும். போயிடுங்கம்மா! இது இந்த வீட்டோட வாரிசு! இந்த வம்சம் விருத்தி அடையாம போயிட கூடாதும்மா!” தன் விசுவாசத்தை நிலைநாட்டினாள் அவள். அவள் கூறுவதும் சரியென தோன்ற அங்கிருந்துக் கிளம்பினாள் அவள்.

ஆனால் அங்கோ எரிச்சலின் உச்சத்தில் இருந்தார் நாராயணன்.

“நீ அவ அம்மாவை பழி வாங்க தானே அவளை யூஸ் பண்ணிக்கிட்ட! பிசினஸ் விஷயத்துல எதாச்சு லாஸ் ஆனா எல்லாம் உன் பொறுப்பு தான்! அவ அம்மா அவமானப்படுத்தினது மறக்கலையா??” மதுமதியின் ஏளன குரல் உண்மையில் அவரை உலுக்கிப் பார்த்தது. பழம் நினைவுகள் கண்முன் நர்த்தனம் ஆடின.

“ஆம்! நிச்சயம் நான் பழி வாங்குவேன்.” என்று மனம் சூளுரைத்த வேளையில் தான் தர்மாவின் குரல் செவிகளில் விழுந்தது. காதல், நேசம் அனைத்தும் மறந்துப் போக, கர்வத்தோடு எழுந்துச் சென்றார். திக்கற்ற வேளையில் கிட்டிய சிறு ஔியாய் மனதிற்கு ஆறுதல் நல்கியது அவர் முகம். எனினும் தன்னைக் கண்டதும் அவர் படி இறங்கி வாராமல் அங்கே நின்றது மேலும் திகிலூட்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.