(Reading time: 12 - 23 minutes)

விபாகரனுக்கு அவன் கண்களையே நம்ப முடியவில்லை. இப்போது காரில் வரும்போது யாதவி பற்றி பேசிக் கொண்டு வந்ததால் தான் இப்போது அவள் இங்கு அவன் வீட்டு சமையலறையில் இருப்பது போல் ஒரு பிரமையா? என்று நினைத்து கண்களை கசக்கிவிட்டு பார்த்தான். அப்போதும் அவன் கண்ணை விட்டு அவள் அகலவில்லை.

கனவா என்று கைகளை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கை வலிக்கவும் அது நிஜம் தான் என்று உணர்ந்தவனுக்கு, இது இப்படியே நீடிக்கக் கூடாதா? நிரந்தரமாய் யாதவி அவன் வீட்டிலேயே இருந்துவிடக் கூடாதா? என்றெல்லாம் அவன் நினைப்பு ஓடியது.

யாரோ பின்னால் இருந்து தன்னை பார்ப்பது போல் உணர்ந்த யாதவி திரும்பிப் பார்க்க, அங்கே விபாகரன் நின்றுக் கொண்டிருந்தான். அவனை அங்கு பார்த்ததும் அதை எதிர்பார்க்காதவளுக்கு இப்போது பயத்தில் கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவனை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் அவள் தயங்க,

அவள் உடல்மொழியில் அவள் மனநிலையை கண்டுக் கொண்டவனுக்கு கஷ்டமாகிவிட்டது. நேற்றும் இப்படி அவனை சந்திக்க அஞ்சினால் தானே, இன்றும் அப்படியே, இதற்கு மேலும் அங்கு நின்று அவளை சோதிக்க விரும்பாதவன், தண்ணீர் அருந்த சென்றதையே மறந்து அங்கிருந்து வெளியேற நினைத்தவனுக்கோ, யாதவி எதற்காக இங்கிருக்கிறாள்? ஏன் இங்கு வந்தாள்? என்பது புரியாத புதிராக இருக்க,

அந்த நேரம் பார்த்து, “காய் கட் பண்ண சொன்னேனே முடிச்சிட்டீயா?” என்று அதிகாரமாய் சொல்லிக் கொண்டு அர்ச்சனா அங்கு வந்தாள்.

அங்கே சமயலறை வாசலில் நின்றிருந்த விபாகரனை பார்த்து அதிர்ந்தவள், “இந்த நேரம் அண்ணன் இங்க வீட்ல என்ன செய்யுது..” என்று நினைத்து மனதில் பயம் கொண்டு,

“எப்போ ண்ணா வந்த.. காஃபி சாப்பிட்றீயா?” என்றுக் கேட்டாள்.

அவள் அழைத்துக் கொண்டு வந்த அதிகார தோரணையிலேயே அர்ச்சனா எதற்காக யாதவியை அழைத்து வந்திருக்கிறாள் என்பது புரிந்தவனாக, அர்ச்சனாவை விபாகரன் கோபமாக முறைத்துப் பார்த்தான். அதில் அர்ச்சனா கொஞ்சம் பயந்து தான் போனாள்.

விபாகரன் அறையை விட்டு வெளியேறும்படி நின்றிருந்ததால் யாதவிக்கு அவன் அர்ச்சனாவை கோபமாக பார்த்தது தெரியவில்லை. யாதவி முன் எந்த உணர்வையும் காட்ட விருப்பப்படாதவனாக,

“ஆமாம் காஃபி வேணும், மேல என்னோட ரூம்க்கு எடுத்துட்டு வா..” என்று சொல்லி அவன் மேலே சென்றதும்,

“அய்யோ நம்மளே காஃபி வேணுமான்னு கேட்டு மாட்டிக்கிட்டோம் போலயே..” என்று நினைத்த அர்ச்சனா,

அங்கே சமையலறையில் பாவமாக நின்றிருந்த யாதவியை பார்த்து, இவளுக்காக தன் சகோதரன் இன்னும் உருகுகிறானே என்று நினைத்து கோபம் கொண்டு,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சீக்கிரம் ஒரு காஃபி போடு..” என்று அதிகாரமாக சொல்லிவிட்டுச் சென்றாள். அந்த நேரம் அவள் கணவன் அலைபேசியில் தொடர்பு கொள்ள, அவளும் அதை ஏற்று பேசினாள்.

அர்ச்சனா சொல்லவும் காஃபியை தயார் செய்த யாதவி அர்ச்சனாவை தேட, அவளோ இன்னும் தன் கணவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

தயார் செய்த காஃபி ஆறி விடுமோ என்று நினைத்த யாதவி, இப்போதைக்கு அர்ச்சனா வருவது போல் தெரியாததால் தானே விபாகரனுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தாள். ஆனால் விபாகரன் அருகில் செல்லவும் அவளுக்கு பயமாக இருந்தது.

நேற்று பார்ட்டியில் சென்றது போலவே இன்றும் கையில் காபி கோப்பையோடு விபாகரன் அறைக்குச் செல்லும் போது யாதவியின் கைகள் நடுங்கியது. இதில் மாடியில் உள்ள அறைக்கு படியேறி வேறு செல்ல வேண்டும், நேற்று போல் நடந்து விடக் கூடாது என்று நினைத்தப்படியே சென்றாள்.

அங்கே அறையில் விபாகரன் வாசலுக்கு எதிர்புறமாக திரும்பியப்படி அலைபேசியியை பார்த்தப்படி நின்றிருந்தான். அறை வாசலை அடைந்தவளுக்கோ அவனை அழைக்க வாய் வரவில்லை. கைகள் இன்னும் நடுங்கியப்படி இருந்தது. அமைதியாக அவன் திரும்பட்டும் என்று அவள் காத்திருக்க,

இந்த முறை வாசலில் யாரோ நிற்கும் அரவம் உணர்ந்து, அது தன் தங்கை தானோ என நினைத்து கோபமாக அவன் திரும்பவும் பயத்தில் அவள் காஃபி கோப்பையே கீழே போட்டாள்.

கோப்பை கீழே விழுந்தது கூட அவனுக்கு பெரிதில்லை. ஆனால் அவனை பார்த்து அவள் பயந்தது வருத்தத்தை கொடுக்கவும், நேற்று போல் அவளுக்கு ஏதாவது காயம் பட்டிருக்குமோ என்று பயத்தாலும் கலங்கியவன்,

அவள் மேல் இருக்கும் அன்பையோ, இல்லை கோபத்தையோ எதையுமே அவளிடம் வெளிப்படுத்தக் கூடாது என்ற காரணத்தால், அவள் குறித்து தன் தங்கையிடம் கோபம் காட்டக் கூடாது என்பதை மறந்தவன்,

“அர்ச்சனா..” என்று வீடு அதிர கத்தினான்.

சத்தம் கேட்டு அர்ச்சனா மட்டுமல்ல, அவனது அன்னை மஞ்சுளாவும் கூட அங்கு வந்தார்.

அதற்குள் அவள் மீது உள்ள கோபத்தில் தான் இப்படி கத்துக்கிறானோ என்று கீழே உடைந்து சிதறியிருந்த பீங்கான் துண்டுகளை யாதவி எடுக்க போக,

ஏற்கனவே அவளுக்கு காயம்பட்டிருக்குமோ என்று பயந்தவன், இப்போது அவள் செயலில் இன்னும் கோபம் கொண்டு, “அர்ச்சனா..” என்று திரும்ப கத்தினான்.

அதில் திரும்ப பயந்தவளாக யாதவி எழுந்துவிட்டாள். அதற்குள் அவர்கள் அருகில் வந்த அர்ச்சனா கீழே சிதறியிருந்த பீங்கான் துண்டுகளை பார்த்து,

“ஏய் உன்னை யாரு காஃபி கொண்டு வரச் சொன்னா..” என்று கோபமாக கேட்கவும்,

திரும்ப “அர்ச்சனா..” என்று கத்தியவன்,

“இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு அவ வீட்ல இருக்கணும்.. டிரைவர்க்கிட்ட வீட்ல விடச் சொல்லு..” என்று கூறினான்.

அந்த வார்த்தையை கேட்ட யாதவி, தான் இங்கு வந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் என்று நினைத்துக் கொண்டாள்.

மையல் தொடரும்..

Episode # 13

Episode # 15

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.