(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 13 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

வீட்டில் அமைதியாக விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்த யாதவியை, “ஷாப்பிங்க் போய் வரலாம்.. அது உனக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும்..” என்று ரூபினி அழைத்துச் சென்றாள்.

ரூபினியின் அன்னை செய்த காரியத்தால் பாலா கொஞ்சம் கோபமாக இருக்கிறான். அந்த கோபத்தை குறைக்கவும், மற்றும் ஷாப்பிங் செய்த பொருட்களை சுமந்து வர ஆள் வேண்டுமே அதற்காகவும் தான் அவள் யாதவியை அழைத்தது.

ரூபினியின் எண்ணத்தை புரிந்துக் கொள்ளாமல் புவனாவே அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு வியப்படைந்தார். பார்ட்டியில் நடந்ததை நினைத்து இன்னும் யாரிடமும் பேசாமல் யாதவி அமைதியாகவே இருந்தாள். இந்த நேரம் பார்த்து மதுரிமாவிற்கும் வெளியூரில் படப்பிடிப்பு இருந்ததால் சென்றுவிட்டாள். அதனால் யாதவியை சகஜ நிலைக்கு எப்படி கொண்டு வருவது என்று புவனா யோசித்துக் கொண்டிருந்த போது தான் ரூபினி வந்து யாதவியை அழைத்ததாள்.

“தேவி ரூபினியோட போயிட்டு வடா.. இப்படி ரூம்லயே அடைஞ்சு ஏன் கிடக்குற.. கொஞ்ச நேரம் வெளியப் போனா உனக்கும் மாற்றமா இருக்கும் இல்ல..” என்று புவனா கூறவும்,

யாதவிக்கும் அது சரியென்று தோன்றியது. அதுவுமில்லாமல் ரூபினி எதற்காக ஷாப்பிங் செல்ல அழைக்கிறாள் என்பதும் அவளுக்கு தெரியும், ரூபினி ஷாப்பிங் செய்த பொருட்களை சுமந்து வர ஆள் வேண்டும். இது போல் பல சமயங்களில் நடந்துள்ளதால், ரூபினிக்கு உதவியாகவும் இருக்கும், தன் மனதையும் வேறு காரியத்தில்  திசை திருப்பியதாகவும் இருக்கும் என்று தொன்றியதால் யாதவியும் சரியென்று  கிளம்பினாள்.

ஷாப்பிங் வந்த இடத்தில் ரூபினி அவளது வேலையை செய்ய, யாதவியோ ரூபினி ஷாப்பிங் செய்த பொருட்கள் அடங்கிய  பையை கையில் வைத்துக் கொண்டு அந்த கடைகளை வேடிக்கைப் பார்த்தப்படி இருக்க,

“ஹாய் ரூபினி..” என்ற குரலில் முதலில் யாதவி தான் திரும்பி பார்த்தாள். அங்கு நின்றிருந்த அர்ச்சனாவை பார்த்து அவள் உடல் ஒருமுறை அதிர்ச்சியில் நடுங்கியது. அதற்குள் குரல் கேட்டு ரூபினியும் அர்ச்சனாவை திரும்பி பார்த்தவள்,

“ஹாய் அர்ச்சனா..” என்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எப்படி இருக்கீங்க ரூபினி.. ஷாப்பிங் முடிஞ்சுதா..” என்று அர்ச்சனா கேட்க,

“இன்னும் கொஞ்சம் இருக்கு அர்ச்சனா..” என்று ரூபினி பதில் கூறினாள்.

அடுத்து அர்ச்சனா அருகில் நின்றிருந்த யாதவியை பார்க்கவும், அர்ச்சனாவை நேருக்கு நேர் பார்க்க விரும்பாமல் அவள் தலை குனிந்தப்படி நின்றாள்.

“இது உங்க வீட்டு வேலைக்கார பொண்ணு தானே..” என்று யாதவியை குறித்து அர்ச்சனா வேண்டுமென்றே கூறவும்,

வேறு நேரமென்றால் ரூபினியும் ஆம் என்று சொல்லியிருப்பாள். ஆனால் பாலா கோபமாக இருக்கும் நேரத்தில் அவன் இங்கு இல்லையென்றாலும் தன் பேச்சில் கவனம் இருக்க வேண்டும், உடன் இருப்பது பாலாவின் தோழன் விபாகரனின் தங்கையாயிற்றே அதனால்,

“தேவியோட அம்மா தான் எங்க வீட்ல வேலை செஞ்சாங்க.. ஆனா தேவியை எங்க மாமியார் அவங்க பொண்ணு போல தான் பார்ப்பாங்க..” என்று கூறினாள். என்னவோ அது கூட அவளுக்கு பெருமை தரும் விஷயமாக தான் அந்த நேரத்திற்கு இருந்தது.

ஆனால் அர்ச்சனா அதையெல்லாம் கவனித்ததாக தெரியவில்லை. “அம்மா வேலைக்காரியா இருந்தா அப்போ பொண்ணும் அந்த வீட்ல வேலைக்காரி தானே.. ஆமா அம்மான்னா அன்னைக்கு வந்து என்னொட பொண்ணுன்னு பார்ட்டியில்  பேசினாரே அவரோட மனைவியா..” என்று வேண்டுமென்றே கேட்டாள்.

யாதவிக்கு ஏனோ அங்கே நிற்பது நெருப்பின் மீது நிற்பது போல் இருந்தது. இன்னும் அர்ச்சனா என்னெல்லாம் பேசுவாளோ? என்ற தவிப்பில் நின்றிருந்தாள்.

அர்ச்சனா கேட்ட கேள்விக்கு ரூபினிக்கும் பதில் தெரியாதே, தனத்திற்கும் யாதவிக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியாததால், அதைப்பற்றி பேச விரும்பாதவள், “அதைவிடுங்க அர்ச்சனா.. இன்னும் சென்னைல எத்தனை நாள் இருப்பீங்க..?” என்று பேச்சை மாற்றினாள்.

“எங்க அண்ணா ஒரே ஊர்ல பத்து நாளைக்கு மேல இருக்கறதே அதிசயம்.. இப்போ உங்க கணவரோட சேர்ந்து பிஸினஸ் பண்ணப் போறதால கொஞ்ச நாள் இங்க தான் இருப்பாங்க.. அவங்க இங்க இருக்கறதால அம்மாவும் இங்க இருந்து அண்ணனை கவனிச்சிக்க ஆசைப்படுவாங்க.. அம்மா இங்க இருக்க வரைக்கும் நானும் இங்க தான் இருப்பேன்..”

“ஓ அப்படியா? அப்போ உங்க கணவரும் இங்க தான் இருப்பாரா?”

“அய்யோ அவர் ரொம்ப பிஸி.. மும்பை பிஸ்னஸ் டீலிங் எல்லாம் அவர் தான் பார்த்துக்கிறார்.. பார்ட்டிக்காக கிளம்பி வந்தவர் இன்னைக்கு காலையிலேயே மும்பை கிளம்பி போயிட்டார்..”

“ஓ நீங்க கூட இல்லாம அவர் தனியா இருந்துப்பாரா அர்ச்சனா..”

“கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா அட்ஜஸ்ட் பண்ணிப்பாரு.. கல்யாணம் ஆன புதுசுல சில வருஷம் வெளிநாட்டுல தனியா இருந்தவராச்சே அதனால மேனேஜ் பண்ணிப்பாரு.. அதில்லாம அங்க வேலைக்கும் ஆள் போட்ருக்கோம் அதனால பிரச்சனையில்லை..

ஆனா பாருங்க இங்க தான் வேலைக்கு ஆள் சரியா கிடைக்கல.. இங்க வந்ததுல இருந்து இரண்டு பேர் மாறிட்டாங்க.. அடிக்கடி லீவ் எடுக்குறாங்க.. பாருங்க இன்னைக்கு கூட வேலைக்கு ஆள் வரல.. நான் தான் எல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு.. உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா இந்த பொண்ணு தேவியை ஒருநாள் ஹெல்புக்கு கூட்டிட்டு போகட்டுமா?” என்று கேட்கவும் யாதவி அதிர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.