(Reading time: 17 - 34 minutes)

யார் உயிரையும் குடிக்கவில்லை அந்த இடியென்று நிம்மதியடைய விடாமல் அமைந்தது இடியின் கோரம்.  கடற்கரையிலிருந்த மின் விளம்பரத் திரையை தாக்கிவிட்டு, திருடனாக, இருண்டிருந்த வானத்தில் தன்னை பதுக்கி கொண்டது அந்த இராட்சத இடி. 

நொடி பொழுதில் நடந்தேறிய விபத்தில் கூச்சலும் குழப்பமுமாக கூட்டம் சிதறி ஓடினாலும் அந்த விளம்பர திரைக்கு அருகிலிருந்தோர் ஆபத்தில் சிக்கியிருந்தனர்.  உயரமான இரு இரும்பு தூண்களின் துணையோடு நின்றிருந்த இராட்சத மின் திரையின் அடியிலேயே ஒரு சிறு கடையொன்றும் இருக்க... மக்கள் வெள்ளம் தூண்களின் இருபுறமுமாக பிரிந்தது.  திரையின் பழுதடைந்த உட்பாகங்கள் நெருப்பை கக்க தொடங்கிய சில வினாடிகளில் முன்பக்கமாக சரிய ஆரம்பித்திருந்தது.

க்களோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருந்த சுமித்ரா திடீரென நின்றுவிட,  அதற்குள் இரண்டடி முன்னேறியிருந்த அனிதாவும், தீபாவும் இவளை கவனித்து திரும்பி வந்தனர்.

“லூசாடி நீ?! எதுக்காக இங்க நிக்குற? வா போகலாம்” மூச்சு வாங்கியபடி தீபா பொரிய அனிதா பயத்தில் நடுங்கினாள்.

வேர்த்திருந்த வதனத்தில் கலக்கமும் பயமும் விரவ, “அங்க...அங்க...” என்று தவிப்போடு சுமி இழுக்கவும்,

“அங்க என்னடி? ஒழுங்கா வா இந்த பக்கம் போகலாம்” திரையிடமிருந்து சற்று தொலைவில் இருந்த போதும் இன்னுமும் சற்று தூரம் நகர்ந்துவிட்டால் தங்களுக்கு பாதுகாப்பென்று கருதி தீபா இவளை இழுத்தாள்.

அவளிடமிருந்து தன்னுடைய கரத்தை விடுவித்த சுமித்ரா, “விடுடி என்னை! அங்கதா சங்கர் இருக்கான்” என்றவளின் வார்த்தைகள் முடிவதற்குள் கன்னத்தை தாண்டி, துடிக்கும் இதழ்களில் இறங்கியது கண்ணீர்.

சற்று முன் அவன் தன்னை கேட்ட கேள்வியோ, இவள் சங்கரின் மீது கொண்டிருந்த கோபமோ சுத்தமாக மறந்துவிட்டிருக்க அவனுக்கான காதலும் அக்கறையும் மேலெழுந்து கொண்டன.  அவனை பற்றி தான் இவளுக்கு நன்றாக தெரியுமே! மக்களுக்கு ஆபத்து என்கையில் அவர்களை காப்பாதே அவன் சிந்தையாயிருக்கும்.  தனக்கான ஆபத்தையும் பொருட்படுத்தாது மற்றவர்களுக்கு உதவுவது தான் சங்கரின் இயல்பு.

அவர்களிருந்த எதிர் திசையில் திரும்பி ஓட துவங்கினாள் சுமித்ரா. 

“சுமி நில்லுடி! அவரென்ன சின்ன பிள்ளையா? உன்னோட பாதுகாப்புதான்டி முக்கியம்.  அவர் போலீஸ்க்காரருங்குறது மறந்து போச்சா சுமி? சொன்னா கேளுடி... என்....னால ஓட முடி...யலை...” தன் மன்னவனின் நினைவில் அதிவேகமாய் ஓடியவளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றாள் தீபா.

யிரை கையில் பிடித்து கொண்டு கூட்டத்தின் எதிர் திசையில் ஓடியவள், மக்களை அப்புறபடுத்தியபடி சற்று தொலைவில் முழுசுகத்தோடு, அங்குமிங்கும் பரபரப்போடு சுழன்று கொண்டிருந்தவனை கண்டபோது தான் அமைதியடைந்தது.  துடித்திருந்த காதல் மனது  அளவிட முடியா நிம்மதியில் நிரைந்தது.

உடலின் சக்தியனைத்தும் கரைந்திருக்க மூச்சை இழுத்துவிட்டவளின் இதழ்களில் மெலிவான புன்னகை.  சங்கரின் சுகநிலை பாய்ச்சிய நிம்மதியில் விளைந்த புன்னகை!

அது முழுமை பெறும் முன்னே மூளை தெரிவித்த பயங்கரத்தில் அடுத்த கணமே நெருப்பு விழுந்த பயிராய் கறுகி போனது அப்புன்னகை! பயத்தில் உடல் நடுங்கி குலுங்கியது.  தன்னவனை எப்படியேனும் காப்பாற்றிவிட முடியாதா என துடித்தவளிடம் ஆவேசம் குடியேறிட, சரிந்து கொண்டிருந்த திரையிடமிருந்து அவனை காப்பதற்காக மறுபடியும் ஓட்டமெடுத்தன கால்கள். 

அது சாத்தியமா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.  அதற்காக தன்னவனுக்கு நேரவிருக்கும் துன்பத்தை கண்டுகொண்டு அமைதியாக இருந்திட எந்த பெண்ணால் இயலும்? அவனிடம் ஓடினாள் சுமித்ரா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீனுவின் "மழையின்றி நான் நனைகின்றேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

திரையின் இருபுறமாக சிதறிய மக்கள் வெள்ளத்தின் நடுவில் சிக்கியிருந்த சங்கர் சரிந்து கொண்டிருந்த திரைக்கடியில் மாட்டிவிடும் ஆபத்து கண்முன் தெரிய வெறிபிடித்த யானையாக மாறியிருந்தாள் அவன் காதலி.  

மக்களை அப்புறபடுத்துவதில் மூழ்கியிருந்த சங்கர் திரையின் சரிவை உணர்ந்தான்.  கூட்டம் குறைவாக இருந்த நேர் திசையில் துரிதமாக நகர் துவங்கினான்.  தூணோ திரையோ எதனடியில் சிக்கினாலும் உயிர் பிழைக்க முடியாதென்பது திண்ணம்.  அதன் உயரம் மற்றும் அகலம், அதனடியில் சிக்காமல் வெளியேறிடும் நேரமும் வேகமும் என எல்லாவற்றையும் கணக்கிட்டு பார்த்தவனுக்கு இவன் தப்பிக்க வாய்ப்பில்லை என்பது புரிந்துவிட்டது.

மனதில் பெற்றோரும் சுமித்ராவும் ஊர்வலம் வந்திட வண்ணமற்ற சூனியமாக காட்சியளித்தது வாழ்க்கை. 

எதிரில் சுமித்ரா தன்னை நோக்கி வருவதை கண்டு, “வராத சுமி! திரும்பி ஓடு! போ சுமி” வேகமாக கையை ஆட்டி அவளை திரும்பி போக சொல்லி கத்தினான்.

தன்னவளின் வருகை உள்ளத்தில் உற்சாக ஊற்றொன்றை தருவிக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.