(Reading time: 17 - 34 minutes)

இதற்குள் தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வந்தனர்.  உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு திரை விழுந்தாலும் யாருக்கும் சேதம் ஏற்படாத வண்ணம் மக்களை அப்புறபடுத்தினர். 

இதற்கு மேலும் திரை தானாக நிற்காது.  எப்படியேனும் அது சரியதான் வேண்டும்.  மாருதன் திரையை சரியாது பிடித்து வைத்திருந்தாலும், எத்தனை நேரம் அதை செய்திட முடியும்? நேர விரயம் ஆபத்து தான். நிலைமையறிந்து தீயணைப்பு துறையோடு காவல் துறையினரும், ஒலிபெருக்கியின் மூலம் எல்லோரையும் தங்களின் கட்டளைக்கிணங்க வைத்து துரிதமாக செயல்பட்டனர்.  சங்கரும் இவர்களோடு இணைந்திருந்தான். 

மாருதனால் திரை நிமிர்ந்து கொண்டிருப்பது தெரியாது, காதலன் உயிர்பிழைத்த அதிசயத்தை கண்டு சிலையென சமைந்திருந்த சுமித்ராவை தன்னோடு அழைத்து வந்து பாதுகாப்பான தொலைவில் நிறுத்திவிட்டு, நொடிக்கும் குறைவான பார்வையில் விடைபெற்றிருந்தான் சங்கர்.

கடமையில் தன்னை இணைத்து கொண்டவன், தீயணைப்பு துறையினரோடு கலந்து பேசி அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளை குழுவாக தனது துறையினருக்கு பிரித்து கொடுத்தான். 

கடமையை செய்த போதிலும், மாருதனின் மீதான தன்னுடைய வெறுப்பை மறுபரிசீலனை செய்தது மனது.  நடந்துவிட்ட விபத்தில் அவனும் மக்களுக்கு உதவினான் தான்.  ஆனால் சரிந்து விழுந்த திரையை அவனால் தடுத்திருக்க முடியுமா? இல்லை அதனடியில் சிக்கி மரணிக்கவிருந்த உயிர்களை காத்திருக்க முடியுமா?

மாருதன் உதவியிருக்கா விட்டால் தன்னையும் சேர்த்து எத்தனை உயிர்கள் இன்று மண்ணுலகை பிரிந்திருக்கும்?! அவனும் தன்னை போலே மக்களுக்கு சேவை செய்கிறான்.  இதில் வேகன் மீது தான் கொண்ட வெறுப்பு எதனால் என்று மனது அதன் போக்கில் அலசிக்கொண்டிருந்தது.

வ்வப்போது கீழுள்ள நிலவரத்தை மாருதனுக்கு ஒலிபெருக்கியில் உடனுக்குடன் தெரிவித்து கொண்டிருந்தனர் தீயணைப்பு துறையினர்.

ஒரு கட்டத்தில் அவர்களின் பரிந்துரையின்படி திரையிலிருந்து பிரிந்தான். படபடவென பெரும் சத்தத்தோடு மண்ணைத் தொட்டிருந்தது திரையும் அதன் தூண்களும்.  சற்று நேரம் அந்தரத்தில் மிதந்து, யாருக்கும் எவ்வித சேதமும் இல்லையென்பது உறுதியான பிறகே வேகன் தரையில் இறங்கினான்.

தேனீ கூட்டமாக மக்கள் அவனை சுற்றி வளைத்தனர்.  மாருதனை தழுவி, முத்தமிட்டு, செல்ஃபி எடுப்பதென பலரும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள, காவல்துறையினர் மக்களிடமிருந்து அவனை வெளியேற்ற முற்பட்டனர். நகரத்து நாயகனின் வருகை தரும் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு படையே சங்கரின் கீழ் அமைக்கப் பட்டிருந்ததால், மனதில் மாருதனும், அவன் மீதான தன்னுணர்வுகள் என பல கேள்விகளும், சிறு பட்டிமன்றமும் நடத்திக் கொண்டிருப்பினும் ஒரு காவலனாக சங்கர் முன் வந்து வேகனுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஐந்து காவலர்கள் நாயகனை சூழ்ந்து கைவேலியிட்டு அவனோடு நடக்க, பெரியவர் ஒருவர் அவர்களின் வழிமறித்து நின்றார்.  சங்கர் அவரை நகர்த்து முயல அவரோ,

“ஒரு நிமிஷம் கொடுப்பா.  மாருதனோடு பேசனும்” என்று வேண்டவும் அவரை காவலரின் கைவேலியினுள் அனுமதித்தான்.

மாருதனின் தலையில் வலக்கையை வைத்து, “மாருதா...இன்னைக்கு நீ செய்த உதவிக்கு யாராலும் கைமாறா எதையும் செய்திட முடியாதுபா.  நீ மட்டும் திரையை தடுத்திருக்கல, இந்நேரத்துக்கு நான் இப்படி உன்னோட பேச முடிஞ்சிருக்காது.  மக்கள் வெள்ளத்துல இந்த வயசானவனால எங்கயும் வேகமா நகரக் கூட முடியாம போச்சு.  அவ்வளவு தான் என் வாழ்க்கைனு நினைச்ச கடைசி நிமிஷத்துலதா தெய்வமா நீ வந்த கண்ணா” என்றவரின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

பக்கத்திலிருந்து, பெரியவரின் பேச்சையும் அவர் உணர்வுகளையும் கவனித்திருந்த சங்கருக்கு அவருடைய நிலை நன்றாகவே புரிந்தது.  அவரால் ஓடி தப்பிக்க முடியாது திரைக்கடியில் சிக்கியிருந்தார் எனில் இவனோ ஓடியும் தப்பியிருக்க முடியாத நிலையல்லவா? அந்த சில கணங்களில் தன் மனதிற்கினியவர்களை இனி பார்க்க போவதில்லை என்ற நிதர்சனம் புரிந்த போது அவன் மனம் கொண்ட வேதனையும், சுமித்ராவோடு காலம் முழுதும் வாழ்ந்திடும் அவனுடைய கனவு நொறுங்கியதும்....அந்நொடி உயிரின் மதிப்பை நன்குணர வைத்தது.

“என்னவோ நான் புதுசா பிறந்த மாதிரி இருக்கு மாருதா.  நன்றினு ஒரு வார்த்தைல என்னோட மனசை கண்டிப்பா சொல்லிட முடியாது.  இத்தனை வருஷம் பூமியில் வாழ்ந்து, தொலைய இருந்த என்னோட உயிரை பிடிச்சு கொடுத்ததால, உனக்கு நீ தொலைச்ச எல்லாமே திரும்ப கிடைக்கட்டும்” ஆழ்மனதிலிருந்து பெரியவர் சொல்லிய வாழ்த்து வேகனிடத்தில் பெரும் மகிழ்ச்சியை தருவித்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.