(Reading time: 10 - 20 minutes)

எல்லோரும் அங்கே கூட, ராணாவும் வந்தார். நடுவில் இருந்த பெரிய திண்டில் அமர்ந்து, மற்றவர்களுக்குக் கை அசைக்க, அவர்களும் சுற்றி அமர்ந்தனர்.

ராணா ஹூக்காவைப் புகைத்து விட்டு , நிமிர்ந்து பார்க்க, மற்றவர்கள் அவரையே பார்த்தனர்.

“ஹ்ம்ம்.. நம் உதய்பூரின் வடக்கு எல்லையை முஹலயார்கள் நாசம் செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த நம் குடிமக்களைத் துரத்தி விட்டு, பெண் பிள்ளைகளைத் தூக்கிச் சென்றுள்ளனர்.” என்று கூறவும், எல்லோரும் கோபத்தில் ஹோ என்று இரைந்தனர்.

“இப்போது நம்மிடம் இருபதாயிரம் படை வீரர்கள் உள்ளனர். தவிர நமக்கு உதவ மற்ற ராஜபுத்திரர்களும் முன் வந்துள்ளனர். பதேபூர் நோக்கிப் படை எடுக்கலாமா?” என்ற கேள்வியை வைக்க,

“ஜெய் பவானி” என்று தங்கள் ஒப்புதலைத் தெரிவித்தனர்.

ப்ரித்வி மட்டும் பேசாமல் இருக்க, ராணா ப்ரித்வியைப் பார்த்தார்.

“பிகானர் இளவரசருக்குப் படை எடுப்பில் உடன்பாடில்லையா?”

“மகாராஜ், இத்தனைப் பெரிய சபையில் என் கருத்தைக் கேட்டு என்னைப் பெருமிதப் படுத்தி இருக்கிறீர்கள். நான் என் கருத்தைச் சொல்லலாமா?

“ஹ்ம்ம்”

“தற்போது படையெடுப்பில் பயனில்லை மகாராஜ்”

மற்ற உபதளபதிகள் “ஏன் ?” என்று வினவவும்

“தாங்கள் வடக்கு எல்லைகளைக் காக்கச் சென்றால், அங்கே பேருக்குச் சிறு படையை அனுப்பி விட்டு, தெற்கில் இருந்து உதய்பூரைத் தாக்கத்தான் முஹலாயர்கள் எண்ணுவார்கள்”

“எப்படிச் சொல்கிறாய் இளவரசே?”

“எனக்குக் கிடைத்த செய்திகளின் படி அக்பர் , ராணாவைத் தோற்கடிக்க, நம் பிரிவினர் சிலரையே தேர்ந்து எடுத்து இருக்கிறார். எனவே போர் நடந்தால் நாமே ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்வோம். முஹலாயப் படைகளை நம் படைகளின் பின்புறம் தாக்க அனுப்பி விடுவார்.”

“எனில் தற்போது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?

“ஏற்கனவே நம் உதய்பூர் வீரர்கள் முஹலாயர்களை விரட்டியுள்ளதால், அவர்களுக்குத் துணையாக இன்னும் பல வீரர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நம்முடைய இந்தச் சிறு படைப் பிரிவை இங்கேயே நிறுத்தி விட்டு, மேலும் வீரர்களை அனுப்பச் சொல்லி பிகானர் தலைவருக்குச் செய்தி அனுப்பலாம். அந்தப் படை வந்தவுடன் இவர்களை உதய்பூர் அனுப்பி வைக்கலாம். , அது வரை ராணா அவர்கள் இங்கே இருப்பதோ, தலைநகருக்குச் செல்வதோ அவர் விருப்பம். “

“இப்போது மட்டும் முஹலாயப் படைகள் நம்மைத் தோற்கடிக்க மாட்டார்களா?”

“இதுவரை அக்பர் ரானாவுடன் நேருக்கு நேராக போரில் ஈடுபடவில்லை. அவரின் படைகளே ரானாவைச் சந்தித்து இருக்கின்றன. இந்த முறை ராஜ புத்திரர்களையே போரில் நமக்கு எதிராக ஈடுபடுத்தப் போவதால், ராணவைப் பார்த்ததும் வீரர்கள் பின் வாங்க வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் அங்கே அதிக அளவில் சேதம் இருக்காது. அங்கே உள்ள வெற்றித் தெரியாமல். இங்கே போர் ஆரம்பிக்காது. அது நமக்கு அனுகூலம்”

அவனின் திட்டத்தைக் கேட்ட ராணாவும் சம்மதித்தார்.

“நிலத்தில் படை வீரர்களை நிறுத்து வைப்பது ஆபத்தானது” என்று ராணாக் கூறவும்,

“கவலை வேண்டாம் மகாராஜ். நாம் நிற்பது அற்புதறான்ய மலை அடிவாரம். நாளை கதிரவன் உதயமாகியதும், நம் படைகளை மேலே அழைத்துச் சென்று விட்டால், முஹலயாரகளால் கண்டு கொள்ள முடியாது. நாமும் மேலிருந்து எதிரிகளைத் தாக்குவது எளிதாக இருக்கும்”

ப்ரித்வியின் துல்லியமான திட்டம் எல்லோருக்கும் திருப்தி தர, தளபதிகள் திரும்பிச் சென்றனர்.

ப்ரித்விராஜ் மட்டும் நிற்க, ராணா கேள்வியாகப் பார்த்தார்.

“மகாராஜ். இந்தக் கணம் போர் எனில், நம் வீரர்களால் என்ன செய்ய முடியும்?” என்றான்

“ஏன்?

“வீரர்கள் அத்தனை பேரும் மது மயக்கத்தில் இருக்கிறார்களே.”

“அவர்கள் சுயநினைவில் தான் உள்ளார்கள். அப்படிப்பட்ட மதுவைத் தான் இங்கே கொடுப்பார்கள்”

“என்றாலும் இதைத் தடை செய்யலாமே. குறைந்த பட்சம் தங்களோடு படை வீடுகளில் தங்கும் போது மட்டுமாவது.”

“இதைத் தடுத்தால் வீரர்கள் உற்சாகம் குறைந்து விடும். நாட்டை விட்டு, வீட்டை விட்டுப் பிரிந்து இருப்பவர்களுக்கு சிறு சந்தோஷம் “

“என்றால் திடீர் என்று அணிவகுக்கச் சொன்னால் என்ன செய்வார்கள்?

“அதை நாளைக் காலையில் பார்” என்றுக் கூறித் தன் குடிலுக்குச் சென்று விட்டார் ராணா.

இந்தக் காட்சியோடு அன்றையப் பொழுது கிருத்திகாவிற்கு விடிந்தது.

“அடக் கருமேந்திரா.. அந்தப் பிரிதிவிராஜ் சொன்ன மாதிரி எல்லாம் குடிச்சு கும்மாளம் போட்டு எழுந்துதுகளா? இல்லை மட்டையைகிட்டாங்களா?” என்று மண்டை உடைக்க,

“அடியே கிருத்தி, இப்போ நீ எழுந்துக்கலை அந்த பிரின்ஸ் உன்னை மட்டையாகிடுவான். சீக்கிரம் எந்திரி” என்று அவள் மனசாட்சிக் காறித் துப்பியது.

சரி சரி . ஓவரா பேசாத “ என்று மனசாட்சிக்குப் பதில் கொடுத்தபடி மவுண்ட் அபு நோக்கிக் கிளம்ப ஆயத்தமானாள் 

தொடரும்!

Episode # 17

Episode # 19

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.