(Reading time: 10 - 20 minutes)

அவளைக் கூர்ந்து பார்த்தவன், மேலே தொடர்ந்து நடந்தான். இளவரசி அவனைத் தடுத்தும் அவன் மேலே செல்லவே, அவளும் அவன் பின்னால் சென்றாள்.

ராணாவின் அருகே சென்றபோது , தன் முன் ஏதோ நிழல் தெரியவே, நிமிர்ந்து பார்த்தார். ப்ரித்விராஜ் நிற்கவே

“என்ன விஷயம் ப்ரித்விராஜ்?” என்று ராணா வினவ,

“மாலைக் கொண்டாட்டங்களில் தாங்கள் கலந்து கொள்ளவில்லையே என்று தங்களைக் காண வந்தேன்” என்று பதில் கொடுத்தான் ப்ரித்வி.

“ஹ்ம்ம். “ என்று மட்டும் ராணா கூற,

“மகராஜ், ஏதோ நீண்ட சிந்தனையில் இருப்பதாகத் தோன்றுகிறது” என்றான்.

அதற்கும் “ஹ்ம்ம்” என்ற பதிலே வரச் சற்று யோசித்தான் ப்ரித்வி.

“யாரையும் எதிர்பார்க்கிறீர்களா மகாராஜ்” என்று கேட்கவும், ராணாவின் விழிகள் விரிந்தன.

அவரின் உற்ற உபதளபதிகள் கூட இவ்வாறு புரிந்ததில்லை. வந்த சில நாட்களிலே இவனால் எப்படி என் எண்ணங்களைப் படிக்க முடிந்தது என்ற சிந்தனையோடு ப்ரித்வியைப் பார்த்தார் ராணா. என்றாலும் பதில் தரவில்லை.

வேறு என்ன கேட்பது என்று புரியாமல் நின்று கொண்டு இருக்கும்போது, சற்று தூரத்தில் புரவிச் சத்தம் கேட்டது. அது வீரர்களின் குடில் பக்கம் அல்லாது அதற்கு எதிர்திசையில் வரவே ராணாவின் முகம் மலர்ந்தது.

சற்றுத் தள்ளி அந்தப் புரவியை நிறுத்தி இறங்கிய வீரன், ராணா அருகில் வந்து குனிந்து வணங்கினான்.

“ப்ரணாம் மகாராஜ்”

“நலமா பஜ்ரங்?”

“மகாராஜ் தயவால் நன்றாக இருக்கிறேன்” குனிந்த தலையை நிமிர்த்தாமல் பதில் சொல்லிக் கொண்டு இருந்தான் வீரன்.

“வெகு தூர பயணமா?

“ஆம். ஆனால் உதய்பூரில் இளைப்பாறிவிட்டு வந்தேன்”

“நல்லது. என்ன செய்தி?”

“யுவராஜ் தங்களிடம் இந்த ஓலையைச் சேர்த்து விடச் சொன்னார்”

“தம்பி சக்தி சிங் நலமா. “

“தற்போது வரை நலம் தான் மகாராஜ். நாளை நிலவரம் தெரியவில்லை”

“ஏன்?”

“ஓலையில் விபரம் இருக்கிறது”

ஓலையைப் படித்த ராணாவின் கண்கள் சற்று நேரம் மூடி இருந்தது. பின்

“பஜ்ரங். வீரர்கள் குடிலுக்குச் சென்று ஓய்வெடு. யாரிடமும் எந்த விவரமும் பிரஸ்தாபிக்க வேண்டாம்” என்றார் ராணா

“உத்தரவு மகாராஜ்” என்று பஜ்ரங் சென்று விட்டான்.

அவன் சென்றதும், ரானா அருகில் வந்த இளவரசி கிரண் தேவி,

“காகூ. பஜ்ரங் கூறியதைப் பார்த்தால் , விரும்பத்தகாதது நடந்து உள்ளதாகத் தெரிகிறதே.”

இளவரசியை ஒரு வினாடி உருத்து விழித்த ராணா, பிறகு

“ஆம். உதய்பூர் எல்லைகளை முகாலயப் படைகள் நாசம் செய்து இருக்கின்றனர். “ என்றார்.

“எனில், தந்தைக்கு ஆபத்தா காகூ” சற்றுக் கவலையுடன் கேட்டாள் இளவரசி.

“தற்சமயம் இல்லை. நம் கோட்டைப் படைகள் அவர்களை முறியடித்துத் திருப்பி அனுப்பி விட்டார்கள். “

இளவரசி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

தந்தைக்கு ஆபத்து என்பதைச் சற்றும் பதறாமல் கேட்ட இளவரசியையும், அதை விட நிதானமாக பதில் அளித்த ராணாவையும் கண்டு ப்ரித்விராஜ்க்கு ஆச்சர்யமே.

தன் மெய்க்காப்பாளன் புறம் திரும்பிய ராணா,

“நட்வார், அனைத்து உபதளபதிகளும் இன்னும் அரை நாழிகையில் என்னைச் சந்திக்க வேண்டும் “ என்று கூற,

“உத்தரவு மகாராஜ்” என்று நட்வார் நகர்ந்தான்.

தன் குடிலுக்குத் திரும்பப் போன ப்ரித்வியை நிறுத்திய ராணா,

“ப்ரித்விராஜ், நீயும் இன்னும் அரை நாழிகையில் அந்த ஆலோசனையில் பங்கேற்க வேண்டும்” எனவும், உற்சாகமாக தலை ஆட்டினான் ப்ரித்விராஜ்.

அவன் செல்லவும், தன் மகளைப் பார்த்த ராணா

“தேவி, ஆலோசனை இந்தப் பெரிய மர நிழலில் நடக்க ஏற்பாடு செய்” என்று கூறிவிட்டு தன் குடிலுக்குச் சென்றார் ராணா.

அவர் செல்லவும் பணியாட்கள் மற்றும் மெய்க் காப்பாளர்களைக் கொண்டு, நீண்ட திண்டுகளையும், கம்பளங்களையும் விரித்தாள். ஒவ்வொரு திண்டின் அருகிலும் புகையிலைக்கான ஹூக்கா வகைகள் வைத்து விட்டு வெளியே வந்தாள்.

இளவரசி ஏற்பாடுகள் முடிக்கவும் உப தளபதிகள் வரவும் சரியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.