தொடர்கதை - வாழ்வே மாயம்! - 01 - ரவை
சகாதேவன், கையில் பை, சட்டைப்பையில் பணத்துடன், சிறையிலிருந்து வெளிவந்தார், பதினெட்டு ஆண்டுகள் கழித்து!
அவரை வரவேற்க, யாரும் காத்திருக்கவுமில்லை, அவர் எதிர்பார்க்கவுமில்லை!
பஞ்ச பாண்டவர்களில், கடைசி சகோதரனின் பெயரை அவருக்கு சூட்டக் காரணம், அவரும் பெற்றோருக்கு ஐந்தாவதாகப் பிறந்தவர்!
ஒரே ஒரு மாறுதல்! இவருக்கு மூத்தோர் நால்வரும் சகோதரிகள்!
தவம் கிடந்து பெற்ற பிள்ளைதான், இன்று பதினெட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, வெளியே வந்திருக்கிறார்!
பெற்றோரோ, சகோதரிகளோ, அவரை எதிர்கொள்ள ஏன் வரவில்லை?
ஒரு கொலைகாரனுடன் உறவு கொள்ள, அவர்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?
அதுவும், சாதாரண கொலையா? ஊரையே நடுங்கவைத்த, நடுத்தெருவில், பட்டப்பகலில், நடந்த கொடூரமான கொலை!
கண்டதுண்டமாக உடலை வெட்டி, துண்டிக்கப்பட்ட தலையுடன், நாலுதெருவில், ரத்தம் சொட்டச் சொட்ட, நடந்து சென்று காவல் நிலயத்தில் சரண் அடைந்த கொலை!
சிறைச்சாலையில்கூட, மற்ற கைதிகள் அவருடன் பழக, பயந்தார்கள்!
முதல் சில ஆண்டுகள், கை,கால்கள் இரண்டிலும் விலங்கு பூட்டி, சிறையில் உருட்டித் தள்ளியதாக கேள்வி!
நீதிமன்றத்திலேகூட, கூண்டிலேறி, குற்றத்தை ஒப்புக்கொண்டபோது, "என் மனசாட்சிப்படி, அந்தக் கொலை அவசியமானது, மீண்டும் அதை அவசியமானால் செய்யவும் தயங்கமாட்டேன்" என்றாரே!
அப்படிப்பட்டவரை வரவேற்க எவர் வருவார், சொல்லுங்கள்!
ஒரு பயங்கர கொலைகாரனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது என யோசிக்கிறீர்களா? அவரைப் பற்றி முழுவதும் தெரிந்துகொண்டால், யோசிக்க மாட்டீர்கள்!
அவரை வரவேற்கவும் வந்தாளே ஒருத்தி, ஓடோடி வந்தாளே!
கையிலிருந்த பூமாலையிலிருந்த பூக்களெலாம் உதிர்ந்த நிலையில், வெகு தூரத்திலிருந்து ஓடிவந்தாளே, ஒருத்தி!
வந்த வேகத்தில், சகாதேவனின் கழுத்தில் பூமாலையை அணிவித்து, கட்டியணைத்து, கையெடுத்துக் கும்பிட்டாளே, அவரை!
"யாரும்மா, நீ?" சகாதேவன் அவளை நிதானமாக கேட்டார்.
" என்னைத் தெரியலையா? எனக்காகத்தானே, நீங்கள் கொலை செய்துவிட்டு, பதினெட்டு