சொல்லிட்டா...”, பதில் கூறிவிட்டு, மறுபடி கவிழ்ந்தடித்து அழ ஆரம்பித்தாள் மைத்தி...
“அகாடமின்னா என்னடி கோந்தே...”
“இப்போ டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ்லாம் இருக்கு இல்லை... அது மாதிரி விளையாட்டு சொல்லித்தர இடம் பாட்டி... அங்க எப்படி கரெக்ட்டா விளையாடணும்ன்னு சொல்லித்தருவா... இப்போ அண்ணாலாம் போடறது, அப்பறம் பாட்டி முறுக்கு சுத்தும் போது பார்த்தது இதையெல்லாம் வச்சுத்தான் நானே புதுசா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சு பந்து போடறேன்... ஆனா அங்க போனா பந்து எப்படி பிடிக்கணும், எப்படி போடணும்ன்னு கரெக்ட்டா சொல்லித்தருவா... அதுவும் இல்லாம நான் தமிழ் நாடு டீம்ல கூட செலக்ட் ஆகலாம் பாட்டி...”
“ஹ்ம்ம் இது எப்படி முடியும் மைத்தி... நீ சொல்றது பார்த்தா அங்க சேர நிறைய பணம் தேவைப்படும் போல இருக்கே... நோக்கே நம்மாத்தை பத்தி தெரியும் இல்லையா... நாமள்லாம் மத்திய தரம் கூட இல்லை... கீழ் மத்திய தரம்... ஒரு ஒரு காசும் யோசிச்சுதான் செலவழிக்கணும்... கிடைக்கற சொல்ப சம்பளத்துல உங்க ரெண்டு பேரையும் நல்லபடியா படிக்க வச்சு கரையேத்தத்தாண்டி அம்மா, அப்பாவால முடியும்... ரகு காலேஜ் சேரும்போது பார்த்தியே... எத்தனை செலவாச்சு... நல்ல வேளை உன்னோட மாமிகள் பாட்டும், ஹிந்தியும் கத்துக் கொடுக்கறா... அதனால அந்த கிளாஸ்க்கு கொடுக்கற செலவு மிச்சமாறது...”
“பாட்டி ஆனா எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்குமே... நான் வேணும்ன்னா ஸ்கூல்லேர்ந்து நின்னுடறேன்... கிரிக்கெட் கிளாஸ் மட்டும் போட்டுமா... அப்போ செலவாகாதுல்ல...”
“அசடாட்டம் பேசப்படாது... நீ படிக்கற படிப்புதான் நாளைக்கு உன்னை உன்னோட கால்ல நிக்க வைக்கும்... நன்னா படிச்சாத்தான் நாளைக்கு ஒசத்தியான வேலைக்கு போக முடியும்...”
“போப்பாட்டி நீயும் அவாளை மாதிரிதான் பேசற... நேக்கு பிடிக்கறதை யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறேள்....”
“ரகு என்ன படிக்க ஆசைப்பட்டான் மைத்தி...”
“அண்ணா ஏதோ இன்ஜினியரிங் படிக்கணும்ன்னு சொல்லிண்டு இருந்தான்....”
“இப்போ என்ன படிக்கறான்...”
“B.Com படிக்கறான்...”
“ஏன் அவனால அவனுக்கு பிடிச்சதை படிக்க முடியலை...”
“அது சேர நிறைய பணம் கொடுக்க வேண்டியதா இருந்ததுன்னு அம்மா சொல்லிண்டு இருந்தா பாட்டி....”
“ரகு அவன் பத்தாவது படிக்கறதுலேர்ந்து இன்ஜினியரிங் படிக்கணும்ன்னு ஆசை பட்டுண்டு இருந்தான்... அது நடக்கலை... நிதர்சனத்தை ஏத்துண்டு டிகிரி படிக்கறானோ இல்லையோ...