(Reading time: 13 - 25 minutes)
Nenchil thunivirunthaal

இதயத்துடிப்பானது உச்சத்தினைத் தொட்டுப் பார்க்க, பெரும் அவதியுற்றவளாய் தனிமையைத் தேடி ஓடினாள் பெண்ணானவள். காதல் வயப்பட்டாலே தனிமை தானே துணையாகிவிடுகிறது.

இரவு நள்ளிரவு வரை உறக்கம் கலைபவன், ஏனோ அன்று விரும்பிய ஆழ்ந்த உறக்கம் கொண்டிருந்தான் . தென்றலாட, சந்திரயொளியும் உடனாட மன்னவன் அவனது ஆழ்மன எண்ணங்களும் உடன் சேர்ந்து நடனமாட, ஆழ்ந்த அவனது உறக்கத்தில் விழித்துக் கொண்டது அவனது கனவுலகம். நன்கு அவனுக்கென வகுக்கப்பட்ட உலகத்தில் சஞ்சரித்திருந்தவனின் மார்பில் ஏதோ அழுந்த திடுக்கிட்டு கண் விழித்தவனின் கண்களில் தென்பட்டதெல்லாம் ஓர் மென்கரம் மட்டுமே! பதறியவனாய் தன்னருகே அவன் திரும்பி நோக்க, சற்றும் அவனுக்கு அவகாசம் அளிக்க விரும்பாதவளாய் அவன் நெஞ்சகத்தினை தன் மஞ்சனையாக்கி தன் சிரத்தினை சமர்ப்பித்துக் கொண்டாள் கங்கா. நிகழ்பவை கனவல்ல நிஜமே என்னும் அளவிற்கு அவளது இருப்பினை உணர்ந்தான் உடையான். ஏனோ அவளைத் தடுக்கவோ, விலக்கவோ, விலகவோ அவன் மனதில் ஓர் எண்ணம் உதித்தப்பாடாக இல்லை.

"கங்கா!" முதன்முறையாய் மென்மையாக, அவனுக்கென்ற உரிய ஓசையின் அடிப்படையில் ஒலித்த அவனது குரலுக்குக் கட்டுப்பட்டவளாய் நிமிர்ந்தவளின் கண்களினை ஆழமாய் கூர்ந்தான் உடையான். அவ்வளவு நாளும், அவ்வளவுத் திங்களும் அவன் கொண்டிருந்த அப்பாவித்தனம் உடைப்பட்டுப் போக, எங்கிருந்தோ வந்து அதன் இடத்தினைப் பூர்த்தி செய்தது கள்ளத்தனம் கொண்ட காதல்! அவள் கண்களை உற்று நோக்கியவண்ணம் தாடை உயர்த்தியவன், எச்செயல் எதேர்ச்சையாக நிகழ்ந்ததற்கு அன்றைய காலையில் சங்கடத்தினை உணர்ந்தானோ, அச்செயலை அத்தனிமை வேளையில் ஆற்ற முனிந்தான். ம்...விசித்ர மனிதர்கள்!

ஏற்பட்ட அந்நெருக்கத்தினைக் கண்டு ஏதோ ஊகித்தவன் தனது செயலை நிறுத்த, பதறிக்கொண்டு கண்விழித்தான் உடையான். இங்ஙனம் நிகழ்வது நிச்சயம் சொப்பனம் அல்ல என்பதனை அவனால் தெள்ளத் தெளிவாக ஊகிக்க முடிந்தது. தனது சொப்பனத்தினை எண்ணித் தானே நொந்தவனுக்கு ஆறுதலாய் வந்து நின்றன வியர்வைத்துளிகள்! கனவுலகில் தனது குட்டு வெளிப்பட்டுவிட, எந்தக் காதலைத் துறந்து செல்லத் துணிந்தானோ, அதன் வேதனை அந்த எண்ணத்திற்காகவே அவனை நிந்திக்கத் தொடங்கியது. சிரத்தினை அழுந்தப் பற்றி சிறிது நேரம் அமர்ந்தவன், என்ன நினைத்தானோ இரு தலையணைகளை எடுத்துக் கொண்டு, தன் அறை நீங்கி தாயின் அறைக்கு சென்றான். நடந்த எவ்வித கலவரத்தினையும் உணராமல் நிம்மதியாகப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தவர், திடீரென திறவப்பட்ட கதவினைக் கண்டு திகைக்க, பேயறைந்தார் போல வந்த மகனைக் கண்டு திடுக்கிட்டார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.