சௌமியா அதே இடத்தில்தான் கடை வைத்திருந்தாள். ஆனால் சத்யன்தான் அவளை பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது. அவளுக்கு அவனை நினைவிருக்குமா என்று சந்தேகப்பட்டான். ஆனால் அவளுடைய கடைக்குள் அவர்கள் செல்லமே அவள் அவனை ஆர்வமாக வரவேற்றாள்.
" எப்படி இருக்கிறீர்கள் சத்தியன் சார். நன்றாக இருக்கிறீர்களா?." என்று நலம் விசாரித்தாள்?"
சத்யனுக்கு நிம்மதி ஆகிவிட்டது. அவளிடம் மீராவைப் பற்றி தாராளமாக இனி விசாரிக்க முடியும் என்று அவன் பேச்சை ஆரம்பித்தான்.
" நீங்கள் நலமாக இருக்கிறீர்களா சவுமியா?" என்றான்.
" நான் நன்றாக இருக்கிறேன் சார். மீரா இறந்ததிலிருந்து நீங்கள்தான் ரொம்பவும் வருத்தத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். இப்பொழுது சரியாகி விட்டதா?" என்று கேட்டாள்.
" அது எப்பொழுதும் சரியாகாது. நான் என்னுடைய மீராவை தேடி கண்டுபிடிக்கும் வரை எனக்கு மனம் அமைதி அடையாது. அவளை பற்றி விசாரிக்கத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்" என்றான்.
சௌமியாவிற்கு அதைக் கேட்கவும் குழப்பமாகி விட்டது. இவன் மீரா இறந்ததை இன்னும் உணரவில்லையா என்பது போல பார்த்தாள். அருகிலிருந்த ரஞ்சன் அவசரமாக விளக்கினான்.
"தப்பா எடுத்துக்காதீங்க சிஸ்டர் மீரா இறந்ததை நாங்கள் யாரும் இன்னும் நம்பவில்லை. ஏனெனில் மீரா என்று அவர்கள் தந்த ஆதாரங்கள் மீராவுடையதாக இருக்க முடியாது என்று எங்களுக்குத் தோன்றியது. முதலில் அந்த பஸ்ஸில் மீரா ஏறினாளா எனயதே சந்தேகமாக உள்ளது. அதனால்தான் நாங்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை. "
"மீரா அந்த விபத்துக்குள்ளான பேருந்தில் ஏறியதும்… அந்த பஸ்சை துரத்திக் கொண்டு சென்றதாகவும் மீராவின் அப்பாவை சொல்லி இருக்கிறாரே' என்று சௌமியா சொன்னாள்.
"ஆனால் உண்மை அது அல்ல சிஸ்டர் மீராவை பின்தொடர்ந்தது அவள் அப்பா இல்லை… பரத் என்பவன்தான் சென்றிருக்கிறான். இது இப்பொழுதுதான் எங்களுக்கு தெரிந்தது"
"பரத்தா…! ஐயோ, அவன் மிகவும் மோசமானவன். மீராவின் தாய்மாமன் என்று சொல்லிக்கொண்டு அவன் அவளை ரொம்பவும் டார்ச்சர் செய்து கொண்டிருந்தான். பல நாட்கள் அவனைப் பற்றி சொல்லி மீரா என்னிடம் அழுதிருக்கிறாள். அவன் சொல்லி இருந்தால் அது உண்மையாக இருக்காது. ஒருவேளை அவனே மீராவை கடத்திக்கொண்டு எங்கேயாவது சென்று ஒளித்து வைத்திருக்கலாம். நீங்கள் இந்த விஷயத்தை விரைவாக கவனியுங்கள்" என்று அவள் பதறினாள்.
அவளுடைய பயத்தை பார்க்கவும் சத்யனுக்கு பயம் வந்து விட்டது. என்ன இது விஷயம் ரொம்ப மோசமாக இருக்கும் போலிருக்கிறதே... ஒருவேளை அவன் உள்மனம் சொன்னது சரிதானோ?. மீரா எங்கேயோ உயிரோடு இருக்கிறாளோ... அவளை தேடாமல் தவிக்க விட்டு விட்டோமோ என்று அவன் துடித்து போனான்.