“யார் பேசுறீங்க?’ மீண்டும் கேட்டது அதே குரல்.
“அங்கே நக்ஷத்ரா இருக்காங்களா?” கேட்கலாமா வேண்டாமா என தயங்கி விட்டு கேள்வியைக் கேட்டாள் பூர்வி.
“நக்ஷத்ராவை உங்களுக்கு எப்படி தெரியும்?”
இவன் நக்ஷத்ரா யார் என்று கேட்க வில்லை. ஒரு வேளை நக்ஷத்ராவின் கணவனாக இருப்பானா? நக்ஷத்ராவிற்கு திருமணம் ஆகி விட்டதா?
“நான் அவளோட பிரென்ட். என் பேர் பூர்வி”
“நான் நக்ஷத்ராவோட கணவன்”
“அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??? மன்னிச்சுக்கோங்க! நாங்க ரொம்ப நாளா தொடர்புல இல்லை. அவ அங்கே பக்கத்துல இருக்காளா?”
“இல்லைங்க” அவன் குரலில் இருந்த சோகம் பூர்வியின் வயிற்றை கலக்கியது. என்னவோ சரி இல்லை என்று சொல்லாமல் சொன்னது. என்னவாக இருக்கும் என்று யோசிக்கவும் அவளுக்குப் பயமாக இருந்தது. அமைதியாக இருந்தாள்.
“அவளுக்கு கேன்சர். தவறி இரண்டு வருஷம் ஆச்சு”
கூரிய கத்தியால் மார்பில் குத்தப் பட்டது போல உணர்ந்தாள் பூர்வி. அவளும் நக்ஷத்ராவும் மிக நெருங்கிய தோழிகள். கிட்டத்தட்ட இருவரும் ஈருடல் ஓருயிர் போன்று இருந்தார்கள். திவேஷை கல்யாணம் செய்துக் கொண்டதற்கு பிறகு முதலில் சில மாதங்கள் பூர்வி நக்ஷத்ரா உடன் தொடர்பில் இருந்தாள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் போனில் பேசுவாள். நிரவி பிறந்ததற்குப் பிறகு குடும்பத்தை தவிர வேறு யாருடனும் பேசவும் நேரம் செலவிடவும் பூர்விக்கு நேரம் இல்லாமல் போனது. மெல்ல மெல்ல நக்ஷத்ரா உடனான தொடர்பு முற்றிலுமாக அற்றுப் போனது.
இப்போது நக்ஷத்ரா இறந்துப் போன தகவல் பூர்வியை மிகவும் வேதனைப் படுத்தியது. கடைசியாக தோழியிடம் ஒரு முறை பேசக் கூட வாய்ப்பு கிடைக்க வில்லையே என்று ஏக்கமாக இருந்தது.
“நக்ஷத்ரா உங்கள பத்தி சொல்லி இருக்கா. நீங்க எங்க கல்யாணத்துக்கு வரலைன்னு அவளுக்கு ரொம்ப வருத்தம். நிறைய தடவை சொல்லி வருத்தப் பட்டிருக்கா.” நக்ஷத்ராவின் கணவன் வருத்தத்தோடு சொன்னான். பூர்விக்கும் வருத்தமாக இருந்தது.
“சாரிங்க. நான் என் கல்யாணத்துக்கு அப்புறம் லண்டன் வந்துட்டேன். அதுக்கு மேல ஃப்ரெண்ட்ஸ் மத்தவங்க கூட எல்லாம் ரொம்ப பேச முடியல. உங்க கல்யாணம் தெரிஞ்சு இருந்தா நேரா வந்து இருக்க முடியலைனாலும் கூட கட்டாயம் போன் செய்து உங்க இரண்டுப்