எனக்கு தர்றீங்களா” என ஹரி பட்டென கேட்கவும் என்ன பதில் சொல்வதென தெரியாமல் பெருமூச்சு விட்டவர் அங்கு லஷ்மியிருக்கவும் அவளை அழைத்தார்
”வாம்மா வா காபியை ஹரி கிட்ட கொடு குடிக்கட்டும்” என சொல்ல அவளும் காபியை அவனிடம் நீட்டினாள். அவளிடமிருந்து காபியை வாங்கும் போதே அவனது கையை கவனித்தாள். காபி குடித்துக் கொண்டிருந்தவனை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் லஷ்மி. அவள் போவதை பார்த்தவனுக்கு இன்னும் கவலையாக இருந்தது
”உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்கல போல அதுவும் சரிதான் என்னை மாதிரி ஒருத்தனை யாருக்குதான் பிடிக்கும்”
”சே சே அப்படியில்லை”
“இல்லை எனக்கு தெரியும் நான் அவளுக்காக ஒரு புடவை நெய்யறேன் அவள் ஊருக்கு போறதுக்குள்ள நெஞ்சி அவளுக்கு கொடுத்துடனும் ஏதோ என் ஞாபகமா அவள் அதை கட்டிக்கட்டும்” என சொல்லி வருத்தப்பட்டவனின் தோளில் ஆதரவாக கைவைத்து சமாதானம் செய்தார் கேசவன்
”நான் ஒரு டாக்டர் இருந்தாலும் ஆரம்பத்தில எனக்கும் வருமானம் வரலை அதுக்குள்ள எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி படிச்சி முடிச்சதும் கல்யாணம் அடுத்து தீப்தி பிறந்தா அப்புறம்தான் நான் வேலைக்கு போக ஆரம்பிச்சேன் பெரிசா வருமானம் இல்லை இப்ப மாதிரி ஆஸ்பிட்டல் இல்லை சாதாரண க்ளீனிக்தான் அதுவும் வீட்டுக்கு முன்னாடி ஒரு சின்ன ரூம்ல வைச்சேன்.
ஆரம்பத்தில 5 6 பேர்தான் வந்தாங்க, என்னத்த வருமானம் வரும்னு சொல்லு அப்பவே என் அப்பா உடம்பு சரியில்லாம இருந்தாரு, அவரையும் நான் பார்த்துக்கனும் என் குடும்பத்தையும் பார்த்துக்கனும், தீப்தியையும் படிக்க வைக்கனும் கையில சுத்தமா பணம் இல்லை.
ஏதோ தினம் வர்ற நோயாளிகள் தர்ற பணம்தான் வீட்டு செலவுக்கு சாப்பாட்டுக்கு சரியா போச்சே தவிர 5 ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியலை. அப்படி ஒரு நிலைமை. நான் டாக்டர் படிப்பு படிச்சாலும் கவர்மெண்ட் ஜாப் கிடைக்கலை, பணம் பத்தலை. ரொம்ப கஷ்டப்பட்ட பின்னாடிதான் ஒவ்வொரு விசயமும் எனக்கு கிடைச்சது. ஆனா உனக்கு அப்படியில்லை இன்னும் உனக்கு கல்யாணம் ஆகலை நாட்கள் இருக்கு என்னைப்போல நீ கஷ்டப்படவேணாம் இந்த மூட்டை தூக்கறத விட்டுடு. நான் உனக்கு பணம் தரேன் அதை வெச்சி தொழில் ஆரம்பி”
“பணமா வேணாம் மாமா நீங்க பொண்ணு தரவே யோசிக்கிறீங்க உங்க கையால பணத்தை வாங்கிட்டு வேணாம் மாமா எனக்கு அதுல விருப்பம் இல்லை”