சில்லென்ற அதிகாலை காற்று ஓடிவந்து அவளை கட்டி அணைத்து தழுவிக் கொள்ள அதில் தேகம் சிலிர்த்து போனாள் மிருணாளினி.
அவள் கைகள் தானாக உயர்ந்து அவள் புடவையின் முந்தானையை இழுத்து தோளோடு சேர்த்து போர்த்தி கொண்டவள் கைகள் இரண்டையும் சூடு பறக்க தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
அந்த அதிகாலை பனிகாற்று பட்டு அவளின் ஆப்பிள் போன்ற கன்னங்கள் இரண்டும் பனியில் நனைந்த ரோஜாவாய் பளிச்சென்று அதே நேரம் சிலிர்த்து கொண்டு இருந்தன..
அவள் கரங்களின் சூடு படவும் அதுவரை நடுங்கி கொண்டிருந்த கன்னங்கள் மிதமான சூட்டில் கொஞ்சமாய் வெம்மையை அனுபவித்தன.
தூரத்தில் ஆட்கள் நடமாடுவது கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டமாய் இருக்க அதை கண்டவள் மனமோ குதூகளித்தது...
“வாவ்...! என்ன ஒரு க்ளைமேட்...! செமயா இருக்கு...பெங்களூர் பெங்களூர் தான்...” என்று மீண்டுமாய் தன் கரங்களை தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டவள் அந்த சூழலை ரசித்தவாறு தன் நடையை தொடர்ந்தாள் மிருணாளினி.
“சே...இப்படிப்பட்ட ஒரு நல்ல க்ளைமேட் ஐ மிஸ் பண்றாளுங்க அந்த எருமைங்க ரெண்டு பேரும்...” என்று சிரித்துக் கொண்டவள் நினைவு தன் தோழிகளிடம் சென்று நின்றது.
பெங்களூரின் நடுங்க வைக்கும் குளிருக்கு இழுத்து போர்த்திக் கொண்டு படுக்கையில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தனர் மைத்தியும் ஆனந்தியும்..
வெளியில் செல்ல தயாராகி நின்ற மிருணா அவர்கள் மீதிருந்த போர்வையை உருவ, அரண்டு போனாள் மைத்தி. தன் கண்ணை தேய்த்து கொண்டு உற்று பார்க்க, அங்கே இடுப்பில் கையை வைத்து முறைத்தபடி நின்றிருந்த மிருணாளினியை காணவும் கொல வெறியில் அவளை முறைத்து பார்த்தாள் மைத்தி...
“என்னடி இது... நடு சாமத்துல இப்படி மேக்கப் போட்டுகிட்டு வந்து பேய் மாதிரி முறைச்சுகிட்டு நிக்கற...” என்று முறைத்தாள் மைத்தி...
என்னது? நடு சாமமா? காலையில் ஆறு மணிதான் உங்க ஊர்ல நடு சாமமா? விளங்கிடும்.. மணி ஆறு ஆச்சுடி. வெளில க்ளைமேட் சூப்பரா இருக்கு. அப்படியே ஒரு வாக் போய்ட்டு வரலாம்.. வாங்க டீ... “ என்று உற்சாகத்தோடு அவர்கள் மீதிருந்த போர்வையை இன்னுமாய் விலக்கினாள் மிருணா..
“என்னது? வாக்கிங் ஆ? அதுவும் இந்த குளிரில்... ஏ.. பேசாம படுடி... நடக்கறது எல்லாம் நம்ம ஊர்ல போய் நடந்துக்கலாம்... ஆனால் இந்த க்ளைமேட்டிற்கு இப்படி இழுத்து போர்த்தி
Thank you.