(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

சரி! அப்படின்னா எப்பவும் போல நீ அம்மா அப்பாவை அழைச்சிட்டு வந்து பரிசு வாங்கு. கோவிலுக்குப் போக இது மாதிரி வாய்ப்பு கிடைக்காதேன்னு பார்த்தேன். மற்ற நாட்களில் வகுப்புகளைக் கட் அடிச்சால் ஈசியா எல்லாருக்கும் தெரிஞ்சிடும். வேற எந்த சமயமும் உன்னால் வீட்டை விட்டு வெளிலையும் வரமுடியாது. இந்த விழா மாதிரி சமயத்துல யாரும் கண்டுக்க மாட்டாங்கன்னு தான் இப்ப போலாமான்னு கேட்டேன். பரவாயில்ல ரம்யா, உன் விருப்பம். என் முட்டக்கண்ணிக்கு எது இஷ்டமோ அது தான் எனக்கும் என்றான். யோசிச்சுச் சொல்றேன் என்று ரம்யா சொல்ல, சீக்கிரமா சொல்லிரு, அம்மாகிட்ட அதுக்கேத்த மாதிரி மீட்டர் போடணும்.  நீயெல்லாம் எதாச்சும் அடிச்சு வைப்பியா. இல்லாட்டி அதுலயும் ரொம்ப நேர்மையா? என்றவனிடம் அதெல்லாம் அடிச்சு வைப்பேன், ஜெராக்ஸ், பிரிண்ட் அவுட், பிரவுசிங்னு வாங்குறது, கிராப் பேப்பர், சார்ட் வாங்குறதுன்னு கைல காசு எப்படியும் அப்பப்போ தேத்திப்பேன் என்றாள் குறும்பான குரலில்.

அப்புறம் உன்கிட்ட ஒன்னு கேக்கணும் தினேஷ் என்றவள், “என்னை முட்டைக்கண்ணின்னு பேர் வச்சிக் கூப்பிடுற,  என் கண்களை ரொம்பப் புடிக்கும்னு அன்னிக்கு சொன்னியே தினேஷ், நான் காண்டாக்ட் லென்ஸ் போட்ருக்கேன்னு உன்கிட்ட சொல்லிட்டேனா? எனக்கே ஞாபகம் இல்லை, லென்ஸ் போடாத சமயம் கிளாசஸ் தான் போடுவேன். என் தம்பி ரகு மாதிரி நீயும் என்னை சோடாபுட்டின்னு சொல்லிற மாட்டியே. கண்ணாடி போட்டுகிட்டா ஒரு வேளை என்னை உனக்குப் பார்க்கப் புடிக்காதோ?” ரம்யா இதை சொல்லி முடிக்கவும், “கண்ணாடிக்குள்ள இருந்தாலும் என் கண்ணுக்குட்டியோட கண்ணு எனக்கு ரொம்ப ரொம்பப் புடிக்கும். அந்த ரெண்டு கோழிமுட்டைக் கண்ணுக்கும் உம்மா!அப்புறம் பேசறேன்!” என்றவன் டக்கென்று போனை வைக்கவும் அங்கே தினேஷின் அருகே  யாரோ வந்திருப்பதை உணர்ந்து இவளும் போனை வைத்தாள்.

தினேஷும் அவளும் மட்டும் தனியே பயணம் செய்யும் அனுபவம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்த அதே நேரத்தில், எங்கேனும் யாரேனும் பார்த்து அவர்களின் பெற்றோர்களிடமோ கல்லூரியிலோ போட்டுக் கொடுத்துவிட்டால் இருவரின் படிப்பும் கேள்விக்குறியாகிவிடுமே என்ற பயமும் இருந்தது. இறுதியில் அவனுடன் வர சம்மதம் சொன்னவள், அம்மா அப்பாவிடம், பள்ளி ஆண்டு விழா போல கல்லூரி ஆண்டு விழாவிற்குப் பெற்றோர்கள் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை என்று சொல்லிவிட்டாள்.

அவர்கள் இருவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்த ஆண்டுவிழா நாளும் வந்தது. காலை எட்டு மணிக்கு முதல் ஆளாய் டிபார்ட்மென்ட் சென்று தனது வருகையைப் பதிவு செய்தாள்.  பிறகு கல்லூரியின் வாசலை அடைந்து பேருந்துக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.