"பாரதி, அந்த பணம் இருக்கும் போது ஏன் இந்த வேலை எல்லாம்? அதை வாங்கி பேங்க்கில் போட்டால் கூட அதுல இருந்து கிடைக்குற வட்டியே போதுமே...??"
இது வரை அவள் கேட்ட பாரதியை எடைப் போடும் கேள்விகள் போல் இல்லாமல், இதை நிஜமாகவே பாரதியை புரிந்துக் கொள்ள கேட்டாள் கற்பகம்.
"பணம்! அதை வைத்து என்ன செய்வது மேடம்?" என்றாள் பாரதி.
அவளின் பதிலில் இருந்த வருத்தம், அலுப்பு, கசப்பு மனதை தொட,
"இந்த வயதிலேயே ஏன் இந்த அலுப்பு பாரதி?" என வினவினாள் கற்பகம்.
ஒரு பெருமூச்சை பதிலாக கொடுத்து விட்டு, சில வினாடிகள் கழித்து,
"இந்த பணம் என் வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது... எனக்கு அதன் மேல் எந்த பற்றும் இல்லை... அது இருப்பதால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை... அதை வச்சு விபத்தில் இறந்துப் போன என் அம்மா அப்பாவை திரும்ப கொண்டு வர முடியுமா, இல்லை காணாமல் போன என் சந்தோஷத்தை கொண்டு வர முடியுமா??? ப்ச்... இந்த வேலையை நான் செய்வது என் மன திருப்திக்காக மேடம். மற்றபடி, ஊரில் இருக்கும் வீடு, இடங்களில் இருந்து வரும் பணமே எனக்குப் போதும்..." என்றாள் பாரதி.
கற்பகத்திற்கு பாரதியின் பதிலில் சில விஷயங்கள் புரிந்தன, சில விஷயங்கள் புரியவில்லை. பாரதியுடைய பெற்றோர் விபத்தில் இறந்து விட்டனர் என்பது புரிந்தது. ஆனால், அவள் சந்தோஷத்தை தொலைத்த காரணத்தையும், பணம் அவள் வாழ்க்கையை மாற்றிய விதமும் புரியவில்லை. ஆனால் பாரதியின் குரலில் இருந்த வருத்தம் கற்பகத்தை மேலும் அதைப் பற்றி பேசி தூண்டி துருவ விடாமல் தடுத்தது.
முன்பு இருந்த ஒருவித எதிர்மறை மனநிலை மாறி, கற்பகத்திற்கும் பாரதி விவேக்கிற்கு ஏற்றவள் தான் என்ற எண்ணம் இப்போது தோன்றியது. கூடவே, உமா பாரதி விவேக்கை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்ன விஷயம் நினைவில் வரவும்,