“சரி, சரி சத்யா... இந்த ஒரு தடவை ஓகே... இதுக்கு மேல இப்படி ஏதாவது செய்றதா இருந்தா எனக்கு முதல்ல போன் போட்டு சொல்லு... தேவை இல்லாம நீ எதுலேயும் தலையிட வேண்டாம்... நானே சக்தியையும் சேர்த்து மேனேஜ் செய்துப்பேன்... புரியுதா?”
“சரிங்க...” என்று நல்லப் பிள்ளையாக சொன்னாள் சத்யா.
தென்றல்வாணன் அவனுடைய சீட்டிற்கு திரும்பியப் போது சக்தி அஹல்யாவிடம் மெல்லியக் குரலில் மும்முரமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்த தென்றல்வாணனுக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது... ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,
“சொன்ன மாதிரி வந்ததுக்கு தேங்க்ஸ் அஹல்யா... சேகரன் கேஸ் பத்தி உங்க கிட்ட பேசனும்...” என்றான் ஒன்றுமே இல்லாதததைப் போல.
அஹல்யா சக்தியைப் பார்த்தாள். சக்தி தென்றல்வாணனிடம் பேசினாள்.
“பேசுங்க இன்ஸ்பெக்டர்...! இந்த ஸ்டேஷன்ல லேடி போலீஸ் இல்லைன்னு கேள்விப் பட்டேன்... இப்போ மூணு லேடி போலீஸ் கண்ணுல படுறாங்களே... ப்ராபர் ப்ரோசிஜர் படி தான் எல்லாம் செய்றீங்க... அப்புறம் என்ன?”
சத்யா அப்போது தான் அங்கிருந்த ஏட்டுடன் பேசிக் கொண்டிருந்த பெண் காவலர்களைப் கவனித்தாள்.
“தேங்க்ஸ் சக்தி. வாங்க அஹல்யா, அந்த ரூமல் இருந்து பேசலாம். நீங்க இங்கேயே வெயிட் செய்ங்க சக்தி,” என்ற தென்றல்வாணன் பெண் காவலர்களை உடன் வரச் சொல்லி விட்டு பக்கத்து அறைக்கு செல்ல, அஹல்யா தயக்கத்துடன் அவனை பின் தொடர்ந்துச் சென்றாள்.
சக்தியும், சத்யாவும் அஹல்யா தெரிவதுப் போல இருந்த பெஞ்சில் அருகருகே அமர்ந்தார்கள்.