”வேங்கையன் வீட்டுக்கு போகப்போற, இப்படியா போவ, பட்டுப்புடவை நகைநட்டுன்னு அலங்காரமா போனாதானே நல்லாயிருக்கும்“
”ஆனா எதுக்கு ஆன்ட்டி இதெல்லாம் ஓவரா இருக்குமே“
”ஒண்ணும் கிடையாது நீ வா” என அவளை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றவர் அவர் அதுவரை அணியாத பட்டுப்புடவையை அவளுக்கு அணிவித்தார், தனது பூர்வீக குடும்ப நகைகளை மஹதிக்கு சூட்டி அழகு பார்த்தார். அவளோ மணப்பெண் போலவே இருந்தாள்
”என்ன ஆன்ட்டி இது, எனக்கு என்ன கல்யாணமா நடக்கப் போகுது”
”இல்லை பொண்ணு பார்க்கற படலம் நடக்கப் போகுது, ஒரு மாற்றத்துக்கு பொண்ணே பையனை தேடிப்போறா அவ்ளோதான், உன்னோட திட்டப்படி நீ வேங்கையன் வீட்டுக்கு சின்ன மருமகளா ஆகப் போற, சின்ன மருமகளா இருக்கனும்னா இப்படியெல்லாம் அலங்காரத்தோட இருக்கனும் மஹதி”
”அப்படியா சொல்றீங்க”
”ஆமாம்” என சொல்லிய நேரம் குபேரன் அங்கு வந்தார் மஹதியை மணபெண் அலங்காரத்துடன் பார்க்கவும் பூரித்துப் போனார்
”என் கண்ணே பட்டிடுச்சி நீ ரொம்ப அழகா இருக்க”
”பின்ன இருக்க மாட்டாளா இப்ப அவள் யாரு வேங்கையன் அப்பா வீரசிங்கம் வீட்டு சின்ன மருமகளாச்சே” என வேணி சொல்ல மஹதிக்கு சிரிப்பே வந்து கலகலவெனச் சிரித்தாள்.
குபேரனோ சற்று வருந்தினார்
”என்னாச்சி அங்கிள் உங்க முகம் வாடிப்போச்சே ஆன்ட்டி சொன்னது கேட்டு உங்க மனசுக்கு வருத்தமா இருக்குதா”