”எப்படி ஒண்ணா உட்கார்ந்து ஜாலியா சாப்பிடறாங்க பாரு சே” என அலுத்துக் கொண்டு சமைக்கலானாள்.
சமையல் செய்து முடித்து மூர்த்தி சொன்னது போல அவனுக்கு அவனது பெற்றோர்க்கு என அவர்களது அறையிலேயே சாப்பாடு கொண்டு வந்து வைத்துவிட்டு காத்திருந்தாள், அவர்களோ ஆயிரம் குறைகளை சொல்லியபடியே சாப்பிட்டு முடித்தார்கள், அதிலும் மூர்த்தி பேருக்குதான் டீசன்டானவன் சாப்பிடும் இடத்தை குப்பை போல ஆக்கி வைத்திருந்தான், அதை அப்படியே சுத்தம் செய்ய ஜானகிக்கு மனம் வரவில்லை, ஆனாலும் வேறு வழியில்லையே என வெறுப்புடனே செய்து முடித்து வந்தாள்.
அவள் வருவதற்குள் வேலைக்காரி அனைத்து சாமான்களையும் கழுவிவிட்டு உறங்கிக் கொண்டிருக்க ஜானகிக்கு கடுப்பாக இருந்தது, வேலைக்காரியை எழுப்பினாள் பாவம் அவள் அசதியில் நன்றாக உறங்கிக் கிடக்கவே ஜானகியே அனைத்து சாமான்களையும் கழுவிவிட்டு ஓய்ந்துப் போய் வந்தாள்
இன்னும் அவள் சாப்பிடவில்லை அதை கேட்க அங்கு யாரும் இல்லை முக்கியமாக மூர்த்தியில்லை, அவளுக்கும் பசிஉணர்வே போய் அசதி வர தன் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்து கண்கள் மூடினாள்.
வேங்கையன் மனைவியாக இந்த வீட்டுக்கு மருமகளா வந்த பின்பு அவளுக்கு பிடித்த உணவுகளைதான் மங்களம் சமைத்தார், அவளும் அனைவருடனும் உண்ணாமல் தனியாக தன் அறையில் உண்டாள், வேங்கையனுடன் உண்ண அவளுக்கு வெறுப்பு, மற்றவர்களுக்கு பரிமாறுவதற்கு கூட கஷ்டப்பட்டாள்
பெரிதாக சமையல் வேலை இல்லை, அனைத்துமே மங்களமும் மற்ற வேலைகளுக்கு வேலைக்காரியும் செய்துவிடுவதால் அவள் வெகு நேரம் ஓய்வுடனே இருப்பாள், நேரத்திற்கு அவள் அறைக்கே உணவு வந்துவிடும், அவளும் உண்டுவிட்டு குரல் தருவாள், உடனே வேலைக்காரி சென்று அவள் சாப்பிட்ட பாத்திரங்களை கொண்டு வந்து சுத்தம் செய்வாள்