மகனின் நினைப்பில் வாடியிருந்த அவனின் தாய் மகனின் வரவைக்கண்டதும் மகிழ அவரோ மகன் இன்று ஒரு நாள் பட்ட கஷ்டத்தை எடுத்து சொல்லவும் கண்கலங்கினார், பாவம் கொம்பன் பசியோடு இருக்கிறான் என்றதும் உடனே சாப்பாடு கொண்டு வந்து அவனுக்கு பரிமாறியும் விட அவனும் பசியில் கடகடவென சாப்பிடலானான்.
அதற்குள் கணக்குபிள்ளை அவனை தேடியே வந்துவிட்டான்
”கொம்பா இங்கதான் இருக்கியா கிளம்புப்பா, அங்க காவேரி குதிகுதின்னு குதிக்கறா வீடு வந்து சேரு வாப்பா” என அழைக்க அவ்வளவுதான் முக்கால்வாசி சாப்பிட்டிருந்தான் காவேரி என்றதும் அப்படியே கைஅலம்பிவிட்டு ஓடியேவிட்டான். அவனின் போக்கைக்கண்டு அவனது பெற்றோர்கள் கண்கள் கலங்கினார்கள்.
காவேரியின் வீட்டிற்குள் நுழைந்ததும் அவளின் கோபத்தைக்கண்ட கொம்பன் அமைதியாகவே அவளிடம் சென்று தான் சம்பாதித்த பணத்தை அவளிடம் நீட்ட அவளோ
”இவ்ளோ நேரம் எங்க போயிருந்த“
”என் அம்மா வீட்ல இருந்தேன்”
”எவ்ளோ தைரியம் இருந்தா அங்க போயிருப்ப”
”இதப்பாரு நான் இப்ப சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன் சும்மா என்னை கேள்விகேட்கற வேலையை வைச்சிக்காத”
”ஓ அவ்ளோ திமிரா உனக்கு”
”திமிரு இல்லை பசி, அவ்ளோ வேலை வாங்கறியே எனக்கு சாப்பாடு தரனும்னு தோணிச்சா உனக்கு, பொண்டாட்டியா வேணாம் ஒரு மனுஷியா தந்திருக்கலாம்ல”