”அதை உன் மாமா பார்த்துக்குவாரு, நீ வா கிளம்பு, இங்க நீ நிக்க நிக்க பிரச்சனைதான் பெரிசாகும், நிம்மதியை தேடி கோயிலுக்கு போய் வரலாம், நிச்சயம் நாம திரும்பி வரும் போது இந்த வீட்ல அமைதியிருக்கும், சரியா வாம்மா வா” என அவளின் பெட்டியை ஓரம் வைத்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்றேவிட்டார் மங்களம்.
மஹதி சென்றதும் வீரசிங்கம் சற்றும் யோசிக்காமல் மூர்த்தியிடம் வந்து அவனின் கன்னத்தில் விட்டார் ஒரு அறை, அவ்வளவுதான் அதில் அவனின் மூளை கலங்கிவிட்டது
”இதுக்கு மேல நீ ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது, போயிடு இங்கிருந்து” என சொல்ல அவனோ தன்னை சமாளித்துக் கொண்டே
”நான் சொன்னதுல என்ன தப்பிருக்குன்னு என்னை அடிச்சீங்க, ஏன் நான் மஹதியை கல்யாணம் செய்துக்க கூடாதா” என கேட்க அவரோ
”என்னையே எதிர்த்துப் பேசறியா நீ”
”ஆமா உங்களால ஜானகியை வழிக்கு கொண்டு வரமுடியலை, அதுக்கு என்னை பலிகாடா ஆக்கப் பார்க்கறீங்களா என்னால முடியாது, நான் ஜானகியை ஏத்துக்க மாட்டேன் எனக்குன்னு பார்த்த பொண்ணு மஹதிதான், நான் அவளை கல்யாணம் செய்துக்கப் போறேன்”
என சொல்ல அதற்கு வீரசிங்கமோ
”மஹதி என் வீட்டு சின்ன மருமகள், அவள் மனசுல என் புள்ளைதான் இருக்கான் புரியுதா கிளம்பு முதல்ல“
”இல்லை இதை நான் ஒத்துக்க மாட்டேன், இப்பவே மஹதியோட வீட்டுக்குப் போய் பேசப் போறேன்“
”தாராளமா செய் ஆனா அதுக்கு முன்னாடி உன்னையே நம்பியிருக்கற ஜானகி விசயத்தை முடிச்சிட்டு கிளம்பு”