மாலை நேரம் வேலை முடிந்ததும் அனைவரும் வீடு திரும்பினார்கள். அகத்தியனை அவனுடைய மாமா காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மறுநாள் காலையில் அகத்தியனுக்காக புது கார் ஒன்று அவனது வீட்டு வாசலில் நின்றது, அதன் பக்கத்தில் வீரா டிரைவராக நின்றிருந்தான். அவனைக் கண்டதும் புன்னகை பூத்தான் அகத்தியன், இவ்விசயம் கேள்விப்பட்ட மறுநொடி அவனுக்கு அவனது தாத்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது, அவனும் அனைத்திற்கும் தயாராகவே தன் தாத்தாவின் அறைக்குச் சென்றான்.
அங்கு அவனது தாத்தா சங்கமேஸ்வரன் கோபத்துடன் நின்றிருக்க அவருக்குப் பக்கத்தில் அவரது மகன் அகத்தியனின் தந்தை பொன்முடியும் கூடவே அங்கமுத்துவும் நின்றிருந்தார்கள். அவர்களை பார்த்தபடியே வந்த அகத்தியன் தன் தாத்தாவின் முன் நின்று
”கூப்பிட்டீங்களா”
என கேட்க அவனை கோபவிழியுடன் பார்த்த சங்கமேஸ்வரன்
”நீ என்ன செய்துக்கிட்டு இருக்கேன்னு தெரிஞ்சிதான் செய்றியா”
”நான் எந்த தப்பும் செய்யலை“
”உன்னைப் பத்தி தினம் தினம் புகார் வந்துக்கிட்டே இருக்கு”
”அப்படியா தாத்தா, அப்போ இன்னிக்கென்ன புகார் தாத்தா”
”எதுக்கு உனக்கு புது கார், என் காரை உனக்கு தந்தா நீ எதுக்காக அதை அங்கமுத்துகிட்ட கொடுத்த”
”உங்க காரை பயன்படுத்தற தகுதி எனக்கில்லை தாத்தா, அதான் எனக்குன்னு ஒரு கார் வாங்கிட்டேன்”