”சரி சரி விடு ஆனது ஆச்சி இனிமேல என்ன செய்றதுன்னு பார்க்கலாம்”
”அதுக்குதான் ஒரு முடிவும் வரமாட்டேங்குதே”
”பொறு எனக்கு காரைக்குடியில ஒரு நண்பன் இருக்கான் அவன்கிட்ட முதல்ல இந்த வீரசிங்கம் வேங்கையன் மூர்த்தி இவங்களை பத்தி விசாரிக்கிறேன், அவன் நம்பிக்கையானவன் அவன் சொல்ற தகவலை வைச்சி மேற்கொண்டு என்ன செய்றதுன்னு யோசிக்கலாம், பாதி ராத்திரியில பாவம் மஹதிக்கு போன் செஞ்சி அவளை வேற கஷ்டப்படுத்தனுமா சொல்லு”
”சரிங்க அப்படியே செய்ங்க” என சாந்தி சொல்லி மகேந்திரன் உடனே காரைக்குடியில் இருக்கும் தனது நண்பனுக்கு போன் செய்தார்.
உறங்கிக் கொண்டிருந்தார் போல கடைசி ரிங்கில் போன் எடுத்து பேச அவரிடம் வீரசிங்கம் வேங்கையன் மூர்த்தி இவர்களை பற்றி விசாரித்தார். பதிலுக்கு அவரது நண்பரோ வீரசிங்கத்தை பற்றியும் வேங்கையனை பற்றியும் மிகவும் உயர்வாக பேசினார். மூர்த்தியை பற்றி பெரிதாக அவருக்கு தெரியவில்லை போலும், இவர்களை பற்றி புகழ்பாடவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது, அவரின் பேச்சைக் கேட்ட மகேந்திரன் அதை சாந்தியிடம் சொல்ல அவரும் முகம் மலர்ந்தார்
”நல்ல இடமாதான்ங்க இருக்கு“
”இருந்தாலும் இரண்டாந்தாரமா என் பொண்ணு கல்யாணம் செய்துக்கனுமா அதுதான் கொஞ்சம் நெருடலா இருக்கு“
”இதுல மஹதியோட விருப்பமும் முக்கியமாச்சே, இப்ப அவளை நாம கூட்டிட்டு வந்துடலாம் காதல் காதல்ன்னு அவள் மனசு மாறாம இருந்தா என்ன செய்றது”
”அவளோட காதல் எவ்ளோ தூரம் உறுதியா இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டுதான் கல்யாணத்தை பத்தி முடிவெடுக்கனும்”