அகத்தியன் அந்த பேச்சுக்கள் கேட்டு திகைத்தான் அதிர்ந்தான், அய்யோ தன்னால் நாச்சியாவிற்கு அவப்பெயர் வந்துவிட்டதே என எண்ணி வருந்தி அதை சரிசெய்ய நினைத்து காரைவிட்டு இறங்க முற்பட பொன்முடி தடுத்தார்
”வேணாம்”
”இல்லைப்பா நாச்சியா மேல எந்த தப்பும் இல்லை, நான்தான் அவள் வீட்டுக்கு போனேன் அது ஏன்னா”
”எனக்குத் தெரியும் நீ காரணம் சொல்ல வேணாம் எல்லாம் நான் தெரிஞ்சிக்கிட்டேன், அதனாலதான் சொல்றேன் அவளை காப்பாத்த போய் உன் மானத்தை இழந்துடாத, கார்லயே உட்காரு நாம கிளம்பலாம்”
”அப்பா புரியாம பேசாதீங்க நேத்து ராத்திரி என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியாது, தெரிஞ்சா இப்படி பேச மாட்டீங்கப்பா பாவம்பா நாச்சியா அவளை காப்பாத்தனும்”
”தேவையில்லை பேசாம உட்காரு” என அதட்ட மறுபக்கம் நாச்சியாவை அந்த ஊரே தூற்றியது. இதுதான் சமயம் என உடனே பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதற்காகவே சங்கமேஸ்வரன் வந்து இறங்கினார். அகத்தியன் இல்லாமலே அந்த பஞ்சாயத்து ஒரு பக்கமாக நடந்தது
”நாச்சியா செய்த தப்புக்கு அவளுக்கு பெரிய தண்டனை தரனும்” என சொல்ல நாச்சியாவால் பேச இயலவில்லை, இத்தனைக்கும் அவள் தைரியசாலிதான் ஆனால் இப்பேர்ப்பட்ட பழி அவள் மீது விழவும் அவளின் தைரியம் நிலைகுலைந்தது தள்ளாடினாள். தாய் தந்தையின் ஆதரவு அவளுக்கு தற்போது தேவைப்பட்டது. அவர்கள் வருவதற்குள் ஊர் மக்கள் தன்னை என்ன நிலைமைக்கு உள்ளாக்குவார்களோ என பயந்தாள். அவள் பயந்தது போலவே நடந்தது
அவள் செய்யாத செயல்களையெல்லாம் செய்தாள் என்றும் அதற்கு தான்தான் சாட்சி என்றும் அவளை அடைய நினைத்த ஆண்கள் வரிசை கட்டிக் கொண்டு முன் வந்து நின்றார்கள்.