”என்ன செய்றீங்க“
”இப்படி கட்டோட போனா எங்க வீட்ல இருக்கறவங்க பதறிடுவாங்க”
”காயம் சரியாயிடுச்சான்னு பார்க்கிறேன் இருங்க” என சொல்லிவிட்டு அவளே கட்டுக்களை அவிழ்த்து காயங்களைப் பரிசோதித்தாள்
”பரவாயில்லை காயம் ஆறியிருக்கு ஆனா முழுசா ஆறலை, கொஞ்ச நாளாகும்”
”இருக்கட்டும் நான் பார்த்துக்கிறேன்”
என சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிச் செல்ல முயல அதற்காக நாச்சியா வீட்டுக் கதவை திறந்தாள். வெளியே ஊரே கூடியிருப்பதைக் கண்டு அகத்தியன் அதிர்ந்தான் அவனின் அதிர்வைக் கண்ட நாச்சியாவும் என்னவென பார்த்து குழம்பினாள்.
ஊரே இவ்விருவரையும் ஒன்றாக கண்டதும் கண்டபடி கதை கட்டத் தொடங்கியது. இவ்விசயம் சங்கமேஸ்வரன் காதுவரை எட்டிவிட்டது, அவர் அப்படியே துவண்டுப் போய்விட்டார். தலையில் கையை வைத்துக் கொண்டார்.
பொன்முடியோ அவசர அவசரமாக நாச்சியா வீட்டுக்குள் வந்தார், கூடியிருந்த மக்கள் கூட்டத்தை தள்ளிக் கொண்டு நேராக அகத்தியனிடம் வந்தவர், ஒரு நொடி நாச்சியாவை பார்த்து பயப்பட அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, சட்டென அகத்தியனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கடகடவென மக்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு தான் வந்த காரில் அவனை அமர வைத்துவிட்டு டிரைவர் சீட்டில் அவர் அமர்ந்து காரை எடுக்கும் நேரம்
”என்ன நாச்சியா பெரிய இடமா பிடிச்சிட்ட போல இருக்கே, இது எத்தனை நாளா ஓடுது, அப்பா அம்மா இல்லாத நேரம் பார்த்து வீட்ல பெரிய விருந்தே வைச்சிட்ட போல” என பேச அந்த பேச்சுகள் கேட்டதும் பொன்முடியின் கைகள் அதிர்ந்தது அவரால் வண்டியை எடுக்க இயலவில்லை.