”கல்யாணம் ஆன பின்னாடி உன்னால வேங்கையனை மறந்துட்டு புது வாழ்க்கையில வாழமுடியுமா”
”முடியும்னுதான் தோணுதுப்பா”
”உறுதியா சொல்ல மாட்டேங்கறியே“
”வேங்கையனோட எனக்குள்ள வந்தது முதல் காதல், அது நான் சாகறவரைக்கும் மறக்க முடியாதுப்பா”
”உன் பேச்சை நம்பி நான் மாப்பிள்ளையை பார்க்கிறேன் கடைசியில என்னால வேங்கையனை மறக்க முடியலைன்னு சொல்லிடக்கூடாது, அப்புறம் எனக்கு மானமே போயிடும்“
”சொல்ல மாட்டேன்பா” என சொல்ல மகேந்திரன் தாமதிக்கவில்லை. கடகடவென மாப்பிள்ளையை தேடலானார்.
வீடே கல்யாண களைக்கு மாறியது, சாந்தியும் மகளின் திருமணத்திற்காக ஜவுளிகடை நகைகடை என ஏறி இறங்கினார், மகேந்திரனும் அவருடைய கௌரவத்திற்கு ஏற்ப ஒரு மாப்பிள்ளையை பிடித்தார், பொண்ணு பார்க்க வரும்படி சொல்லிவிட்டு அந்த விசயத்தை மகளிடம் சொல்ல அவளும் சரியென்றாள்.
சரியாக அந்த நாளும் வந்தது, சாதாரண பொண்ணு பார்க்கும் படலம்தான் ஆனாலும் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்திருந்தால் கையோடு கையாக நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் என நினைத்திருந்தார், அதைப்பற்றி தன் மனைவியிடமும் சொல்லியிருந்தார்.
மஹதியோ பெண் பார்க்கும் படலத்திற்காக தன்னை அலங்காரம் செய்துக் கொண்டாள், மகளை சர்வ அலங்காரத்துடன் காணவும் சாந்தி மனம் மகிழ்ந்தார், மகேந்திரனும் மகளின் மாற்றத்தைக்கண்டு சந்தோஷப்பட்டார், அவளோ தாய் தந்தையின் காலில் விழுந்து எழுந்தாள்