தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
52. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கீதாவிற்கும் இந்துவிற்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது... இந்து உதவிக்காக தொடர்புக் கொள்ள முயன்றப் போது தான் எதுவும் செய்ய முடியவில்லை, இப்போது அர்ச்சனா ஹாஸ்பிட்டலில் இருக்கும் போதாவது உதவலாம் என்ற எண்ணம் அவளுள் இருந்தது... ஆனால், அந்த ஆர்வத்தை காஞ்சனாவை மனதில் வைத்து தான் அடக்கி வைத்திருந்தாள்...! அவள் அர்ச்சனாவிற்கு துணையாக தங்குவதாக சொன்னால் ராஜீவ் மறுக்க மாட்டான் என்பது அவளுக்கு தெரியும்... காஞ்சனா விஷயம் அப்படி இல்லை... திருமணத்திற்கு பின் காஞ்சனாவிற்கு பிடித்த மருமகளாக நடந்துக் கொள்ள அவள் எத்தனையோ செய்திருக்கிறாள், விட்டுக் கொடுத்திருக்கிறாள்... காஞ்சனா இப்போது அவளை மருமகளாக மனமார ஏற்றுக் கொண்டிருந்தாள்... ஆனாலும், இப்போது ஹாஸ்பிட்டலில் தங்குவதாக் சொன்னால் காஞ்சனா என்ன நினைப்பாளோ என்ற தயக்கம் கீதாவிற்கு இருந்தது...
கீதா அவளின் பெஸ்ட் ஃப்ரென்டிற்கு உதவ காஞ்சனாவிடம் பெர்மிஷன் கேட்க தயங்கிக் கொண்டிருக்க, காஞ்சனா திடீர் என்று சொன்ன ‘நான் தங்குறேன்’ ஸ்டேட்மென்ட் மற்றவர்களை விட கீதாவை அதிகமாக ஆச்சர்யப் படுத்தியது...! முக்கியமாக, காஞ்சனா அங்கே தங்க வேண்டிய அவசியம் என்ன என்பது அவளுக்கு புரியவில்லை! இந்து, அர்ச்சனா இருவருமே காஞ்சனாவிற்கு பெரிய அளவில் ‘க்ளோஸ்’ இல்லை... பிறகு என்ன???
மனதில் வந்த கேள்விகளை மறைத்து, “நீங்க எதுக்கு அத்தை? உங்களுக்கு போர் அடிக்கும்... நான் வேணா தங்குறேன்...” என்றாள் கீதா!
“இல்லை, வேண்டாம் கீதா... அர்ச்சனாவும், லக்ஷ்மியும் தானே இருக்காங்க... எனக்கும் என் வயசுக்காரங்களோட பேசின மாதிரி இருக்கும்... எத்தனை நாள் தான் பழைய படம், சீரியல்ன்னு பார்த்து நானும் நேரத்தை தள்ளுறது...” என்றாள் காஞ்சனா.
கீதா அதற்கு பதில் சொல்லும் முன், “காஞ்சனா சொல்றதும் நல்ல ஐடியாவா தான் இருக்கு... அவங்க தங்கினா எனக்கும் துணையா இருக்கும்...” என்றாள் லக்ஷ்மி புன்னகையுடன்.
அதற்கு மேல் கீதா எதுவும் சொல்லவில்லை! ஆனால் காஞ்சனா ‘வாலன்டியரிங்’ செய்ய சொன்ன காரணம் அவளுக்கு உண்மையாக தெரியவில்லை! ஏன் என்ற கேள்வி அவளின் மனதை தொல்லை செய்தது!