தொடர்கதை - திருமதி அகத்தியன் - 07 - சசிரேகா
நாச்சியா சொன்னதைக் கேட்டு அதிர்ந்த சங்கமேஸ்வரன் உயில் பத்திரம் எங்குள்ளது என நினைவு கூர்ந்தார் சட்டென அவருக்கு நினைவு வரவில்லை. பொன்முடியோ அவரை கேள்வி கேட்டு தொல்லை செய்ய ஒரு கட்டத்தில் பளார் என ஒரு அறை விட்டார்
”ஏன்டா இப்படி உயிரை வாங்கற, கொஞ்ச நேரம் சும்மாயிருக்க மாட்டியா, சே நீயும் உங்கம்மாவை போலவே என் உசுரை வாங்கறீங்களே, இப்படி அவள் என்னை தொல்லை செய்ததாலதான் செத்துப் போன்னு அவளை கழுத்தை நெறிச்சி கொன்னேன் அதே போல உன்னையும் கொல்லாம இருக்கனும்னா பேசாம இரு” என அதட்ட பொன்முடிக்கு திக்கென்றது
ஏதோ ஒரு கோபத்தில் பொங்கிவிட்டார் சங்கமேஸ்வரன் அவர் சொன்னதில் இருந்த உண்மை பொன்முடியை அதிர வைத்தது, மேற்கொண்டு கேள்வி கேட்க அவருக்கு வாய் வரவில்லை, முதல்முறை தன் தந்தையை ஒரு கொலைக்காரனாக பார்க்க அதைக் கண்ட சங்கமேஸ்வரனோ
”என்னடா அப்படி ஒரு பார்வை பார்க்கற”
”நீங்க ஒரு கொலைகாரன்”
”என்னது”
”என் அம்மா பிரசவத்தில செத்ததா சொன்னீங்க, இப்ப உங்க கையால கொன்னதா சொல்றீங்களே எது உண்மை”
”ப்ச் ஓ அதுவா உன்னை பெத்து கொடுத்ததும் இந்த வீட்டுக்கே மருமகளா ஆகனும்னு என்னை கட்டாயப்படுத்தினா, நான் முடியாதுன்னு சொன்னேன் ஆனா, அவள் கேட்கலை, ஆண்டாள்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லப்போறதா சொன்னா, எனக்கு வேற வழி தெரியலை, அந்நேரம் அவளை கொல்றது தவிர வேற எந்த யோசனையும் எனக்கு வரலை, உன்னை தூக்கிட்டுப் போய் ஆண்டாள் கிட்ட வைச்சிட்டு, அவள் பெத்த பெண் குழந்தையை தூக்கிட்டு வந்தேன், அப்படியே அதையும் கொன்னுட்டு கையோட கையா உன் அம்மாவையும் கொன்னுட்டு இரண்டு சடலத்தையும் அந்த மரத்துக்கு கீழே புதைச்சிட்டேன்” என சொல்ல