”இல்லைம்மா நீங்க சொல்லித்தான் ஆகனும்” என பிடிவாதம் பிடிக்க ஆண்டாளும் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு கதை சொல்லத் தொடங்கினார்
”அந்த காலத்தில உங்கப்பா பெரிய போராளியா இருந்தாரு”
”போராளியா”
”ஆமாம் என் பாட்டன், என் தாத்தா, எங்கப்பான்னு வழி வழியா வந்தவங்க இந்த ஊரையே இரண்டா பிரிச்சாங்க, மேல வீதி கீழ வீதின்னு ஆண்டாங்க அவங்களோட கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமா அவ்வளவு பாவம் செய்தாங்க, அந்த பாவம்தான் எங்கப்பாவுக்கு ஆண் வாரிசே பிறக்கலை, நான் பிறந்தேன் என்னை செல்லம் கொஞ்சி வளர்த்தாங்க, வளர வளர எனக்கு சரி தப்பு தெரிய ஆரம்பிச்சது, ஒரு பக்குவத்துக்கு வந்தபின்னாடி நம்ம ஊர் இப்படி இரண்டா இருக்கறதுக்கு காரணம் கண்டுபிடிச்சேன், என் பாட்டன் சுகமா வாழறதுக்காகவும் அவருக்கு சேவை செய்றதுக்காகவும்தான் மக்களை பிரிச்சார்ன்னு, எனக்கு அது பிடிக்கலை, இந்த ஏற்றதாழ்வு இல்லாத ஊர் வேணும்னு அப்ப நான் முடிவு செய்தேன், என்னைப் போலவே ஏற்றதாழ்வு பார்க்க கூடாது, உன் அப்பா ஈஸ்வரனும் ஒரு போராளி, அப்ப அவருக்கு இளவயசு, இளரத்தம், வேகத்தோடவும் விவேகத்தோடவும் இருந்தாரு, எதைப் பத்தியும் கவலையில்லை, யார்மேலயும் பயமில்லை, எங்க தாத்தா, என் அப்பாவையே எதிர்த்து நின்னாரு, ஊரை ஒண்ணு சேர்க்க அப்படி பாடுபட்டாரு, அவரோட அந்த குணம்தான் எனக்கு பிடிச்சிருந்தது, அவரை நேசிக்க ஆரம்பிச்சேன் அப்போதான் ஒரு நாள் நம்ம வீட்டு முன்னாடி தன்னைப் போலவே இருக்கற இளம் வயசுள்ளவங்களை கூட்டிட்டு வந்து தகராறு செய்தாரு. அப்பதான் அவர் என்னைப் பார்த்தாரு, நான் அவரை பார்த்தேன் அந்த நாள் என் வாழ்க்கையிலயே மறக்க முடியாத பொன்னான நாள்” என சொல்லியபடியே கண்கள் மூடி பழைய நினைவுகளுக்குள் மூழ்கினார்.
மேலவீதி ஆவுடையப்பன் வீட்டின் முன்
”ஆவுடையப்பா வெளிய வாய்யா, யோவ் வாய்யா வெளிய, இன்னும் எத்தனை நாள்தான் எங்களை அடிமையா நடத்துவ, இன்னிக்கு இதுக்கொரு முடிவு கட்டறேன் வாய்யா வெளிய,