”சரியா சொன்னீங்க அந்தாளை கொன்னுடலாம், அவர் பொண்ணு நம்ம பக்கம்ங்கறதால அந்த ஆவுடையப்பன் செத்தாலும் அந்த பொண்ணால நமக்கு தீங்கு வராது, நாம நிம்மதியா இருக்கலாம்” என சொல்ல அதை அனைவரும் ஒப்புக் கொண்டார்கள், வேறு வழியின்றி ஈஸ்வரனும் ஒப்புக் கொண்டான்.
முடிவில் நடு இரவில் ஈஸ்வரன் தன்னுடன் திடகாத்திரமான ஒரு நால்வரை உடன் அழைத்துக் கொண்டு பதுங்கி பதுங்கி ஆவுடையப்பன் வீட்டிற்குள் நுழைந்தான். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள், அதைப் பயன்படுத்திக் கொண்டு ஆவுடையப்பனை தேடிக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் சென்றார்கள், ஈஸ்வரனும் அந்த பக்கம் இந்த பக்கம் என தேடிச் சென்றபோது ஆண்டாளின் அறையை அடைந்தான். அழகு தேவதை படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ரசித்தான். அவனால் அவளை தாண்டி எதையும் யோசிக்க இயலவில்லை. அதற்குள் அவனை தேடி ஒருவன் வந்து கையோடு அவனை அழைத்துச் செல்ல அந்த அரவம் கேட்டு ஆண்டாள் விழித்துக் கொண்டாள்.
அவளுக்கு யாரோ தன் அறைக்குள் வந்தது போல சந்தேகம் வரவும் என்னவென பார்க்க அறையை அலசி ஆராய்ந்துவிட்டு அறையை விட்டு வெளியேறி வந்தாள். இருள் வேறு வெளிச்சம் குறைவு என்பதால் ஆண்டாள் மெதுவாகவே நடந்தாள். ஈஸ்வரனும் அவனது கூட்டாளிகளும் மறைந்து மறைந்து ஆவுடையப்பனை தேடினார்கள். ஒரு இடத்தில் அனைவருமே ஆண்டாளின் முன் மாட்டிக் கொண்டார்கள், அவர்களைக் கண்டதும் விக்கித்துப் போனாள் ஆண்டாள்
”ஏய் பொண்ணே பயப்படாத நாங்க உன்னை எதுவும் செய்ய வரலை ஆமா, உன் அப்பா எங்க” என போராளி ஒருவன் கேட்க அவளோ அவர்களை கவனமாக பார்த்தாள், அனைவரிடமும் கத்தி அருவாள் என இருந்தது, அவளுக்கு உடனே புரிந்துப் போனது. அதனால் புத்திகூர்மையுடன் யோசித்து அவர்களிடம் பேசினாள்
”உங்களோட மன வேதனை எனக்குப் புரியுது, என் அப்பாவை கொன்னாதான் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்னு நினைச்சி வந்திருக்கீங்க ஆனா, எங்கப்பா இங்க இல்லை அவர் வெளியூர் போயிருக்காரு நாளைக்குதான் வருவாரு” என சொல்ல அவர்கள் அவள் சொன்னதை நம்பினார்கள்.