”முதல்ல தருண்ணு கூப்பிடறதை நிறுத்து, ஆபிஸ் டைம்ல சார்ன்னு கூப்பிடுவல்ல அதே போல கூப்பிடு, கல்யாணம் ஆனாலும் சில விசயங்கள் மாறாது பவானி” என கடிந்துக் கொள்ள அவளின் கண்கள் கலங்கிவிட்டது.
அவளின் கண்ணீரைக் கண்டும் மனம் இரங்காமல் அவன் அதோடு கிளம்பிச் சென்றுவிட பவானியோ அழுதபடியே தன் வேலைகளை முடிக்கலானாள். மணி 11 இருக்கும், அவளுக்கு பயம் வந்தது அச்சத்துடன் தருணுக்கு போன் செய்து விசயம் கூறினாள்
”தருண் எனக்கு பயமாயிருக்கு, இந்த ஆபிசே வெறிச்சோடி இருக்கு, இதுக்கு மேலயும் என்னால இங்க உட்கார்ந்து வேலை செய்ய முடியாது பசிக்குது வேற”
”இந்த காரணம்லாம் என்கிட்ட வேணாம் வேலையை முடிச்சிட்டு வா, இல்லைன்னா நாளைக்கு உனக்கு மெமோ தந்துடுவேன்”
”பசிக்குது தருண்“
”எங்கயாவது போய் சாப்பிடு இல்லை ஓட்டல்ல ஆர்டர் பண்ணி சாப்பிடு”
”இந்த நேரத்தில எப்படி“
”அப்போ கையேந்தி பவன்ல சாப்பிடு, என்னை தூங்கவிடு ப்ளீஸ்” என சொல்லி போனை கட் செய்துவிட பவானிக்கு பசியில் மயக்கமே வரும்போலானது, அவசரமாக கம்பெனியை விட்டு வெளியேறி கையேந்திபவனில் சாப்பிட்டு மறுபடியும் தன் கம்பெனிக்கு வந்து வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்ப அவளுக்கு விடிகாலை 5 மணியாகிவிட்டது, அதன்பின் அவள் நன்றாக நிம்மதியாக உறங்கும் தருணைக்கண்டு உறக்கம் கொள்ளாமல் கண்ணீரில் கரைய அந்நேரம் விழிப்பு வந்து கண்கள் திறந்த தருணோ கண்ணீருடன் இருந்த பவானியை கண்டு மனம் இரங்காமல்
”ஓ வந்தாச்சா டைம் ஆகுது ஆபிசுக்கு, நான் ரெடியாயிடறேன் டிபன் ரெடி பண்ணு” என கட்டளையிட்டு விட்டு சென்றுவிட பவானியோ நிலைகுலைந்து போனாள்.