“பேசி முடிக்கட்டும்டா கூட்டத்தோட கூட்டமா நாம பேசினாலும் எடுபடாது. பொறு அவங்க பேசி ஓயட்டும் அப்புறம் நாம பேசலாம்” என சொல்லவும் கருணாவும் சரியென தலையாட்டி விட்டு மற்றவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.
ரிஷியோ அர்ஜூனுக்கு போன் செய்து செய்தே ஓய்ந்தான். அர்ஜூனோ வண்டியில் வருவதால் போன் எடுக்காமல் இருந்தான். ஒருவழியாக மீட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்த அர்ஜூனை கண்டு கோபமாக முறைத்தான். அவனின் கோபத்தைக்கண்டு சிரித்தான் அர்ஜூன் அவனை சைகை செய்து பக்கம் வரவழைத்தான் ரிஷி. அர்ஜூனும் அவனிடம் வந்து அவன் காதோரம் குனிந்தவன் மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் மெதுவாக பேசினான்
”சொல்லுங்க அண்ணா”
“ஏன்டா போன் பண்ணா போன் எடுக்கமாட்டியா அப்படி என்ன பண்ணிட்டு இருந்த”
“தங்கச்சியை ஹாஸ்டல்ல விட்டுட்டு வரேன். டிரைவிங்ல இருந்தேன் ஒரே டிராபிக் வேற அதான் போன் எடுக்கலை”
“சரிடா என்னாச்சின்னாவது சொல்லியிருக்கலாம்ல”
“என்ன என்னாச்சி எனக்கு புரியல”
“நந்தினியை கொண்டு போய் பத்திரமா விட்டுட்டன்னு சொல்லியிருக்கலாமே”
“என் தங்கச்சியை பத்தி நீங்க ஏன் கவலைப்படறீங்க அவளை நான் பத்திரமா சேர்த்துட்டு வந்துட்டேன்”
”சரி எந்த ஹாஸ்டல் எங்க இருக்கு”
“எதுக்கு கேட்கறீங்கண்ணா”