அவளுக்கு தெரிந்த கிருத்திகா சிரிப்பது கூட அளவோடு தான். எப்போதும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டிருப்பதை போல பறப்பவள்!
கண் முன் இருக்கும் ‘இவள்’ கீதாவிற்கு முற்றிலும் புதியவளாக இருந்தாள்!
“என்ன யோசிக்குறீங்க? அப்போ நமக்குள்ள ரிலேஷன்ஷிப் சரி இல்லையேன்னா? அதைப் பத்தி எல்லாம் யோசிக்காதீங்க அண்ணி. ப்ளீஸ்... எங்க கல்யாணம் எப்படி நடந்துச்சு? எங்களுக்குள்ளே என்ன பிரச்சனை? இதை எல்லாம் பத்தி தெரிஞ்சதை சொல்லுங்களேன்.”
“உங்க பிரச்சனை பத்தி எல்லாம்...”
“ப்ளீஸ் அண்ணி... அவருக்கு என்னை பிடிக்காதா? பிடிக்காமல் கல்யாணம் செய்து வச்சுட்டீங்களா?”
“யாருக்கு பிடிக்காது??? தியாகுக்கு உங்களை பிடிக்காதுன்னா கேட்குறீங்க? நல்லா கேட்டீங்க! அவன் உங்க மேல அப்படி ஒரு பைத்தியம் பிடிச்சு இருந்தான்,” என்று தொடங்கிய கீதா, அவர்கள் திருமணப் பேச்சு தொடங்கிய விதத்தை சுருக்கமாக சொன்னாள்.
தியாகு – கிருத்திகா திருமணம் வேண்டாம் என்று விஜயிடம் அவள் சொன்னதை மட்டும் விட்டு விட்டு மற்றதை எல்லாம் சொன்னாள்!
கீதா சொல்லி முடித்த அடுத்த வினாடி, “அத்தையே எங்க கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாங்களா? எப்படி?” என்றாள் கிருத்திகா ஆச்சர்யத்துடன்!
“எல்லாம் அண்ணாவோட வேலை தான். ஃப்ரான்க்கா சொல்ல போனா பெரியம்மா தான் உங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு நான் நினைச்சேன். ஆனால் அண்ணா பக்காவா பெரியம்மாவை ஹாண்டில் செய்திருந்தான்.”
“என்ன செய்தார்? எப்படி அத்தை ஒத்துக்கிட்டாங்க?”
“அதெல்லாம் முழுசா எனக்கும் தெரியாது. ஆனால் தியாகு ஏதோ மேஜிக் செய்திருக்கான்!“