தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 03 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஓட்டிக் கொண்டிருந்த காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான் உதய்.
பின்னே இருந்து பல பல ஹார்ன் ஒலிகள் கேட்டன.
பைக்கில் இருந்த ஒருவன் கார் கண்ணாடியை தட்டி, ஏதோ திட்டி விட்டு சென்றான்...
உதய்க்கு அது எதுவும் உரைக்கவில்லை...
ஒன்பது வருடங்கள் முன் ஏற்பட்ட அதே திகைப்பு, அதிர்ச்சி இன்னமும் அவனிடம் இருந்தது...
மெல்ல சுதாரித்து காரை கிளப்பி, சின்ன கிளை சாலையில் திருப்பியவன், ஒரு ஓரமாக காரை நிறுத்தி விட்டு ஸ்டீயரிங்கில் தலையை சாய்த்துக் கொண்டான்...
அன்றைய அதிர்ச்சிக்கு பிறகு நந்திதா மீது அவனுக்கு ஏற்பட்டது வெறும் கவர்ச்சி என தனக்கு தானே பலமுறை சொல்லிக் கொண்டான்...
ஆனால் மனம் தான் கேட்க மறுத்தது...
நந்திதாவை அந்த ஒரு வருடம் தினம் தினம் சந்திக்க வேண்டி இருந்தது... பேச வேண்டி இருந்தது... அவளின் காதலுக்கு தூது செல்ல வேண்டி இருந்தது...
கண்களை இறுக மூடிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டான் உதய்.
நந்திதா விரும்பிய அந்த சந்தோஷை அவனுக்கு பிடிக்கவே இல்லை... நந்திதா போன்ற தேவதைக்கு அவன் சரியான இணையே இல்லை!
ஆனால் ஏனோ அது நந்திதாவிற்குப் புரியவில்லை!
அந்த சந்தோஷ் மீது அவளுக்கு அப்படி ஒரு கண்மூடித்தனமான காதல்!