மனமொத்த ஆதர்ஷ தம்பதிகள் என சொல்லும் அளவிற்கு துளசியும், சரத்தும் சிறந்த ஜோடியாக விளங்கினார்கள்.
அவர்களுடைய அன்பை சொல்லும் குழந்தை சாஹித்யா பிறந்து பத்து மாதம் ஆகிறது.
“குட் மார்னிங் அண்ணி!”
உதயின் குரல் கேட்டு கணவன் மனைவி இருவரும் தங்களின் உரையாடலை நிறுத்தி விட்டு அவன் பக்கம் பார்த்தனர்.
“என்னடா அவளுக்கு மட்டும் தான் விஷ் செய்வீயா? எனக்கெல்லாம் கிடையாதா? சரி அது எப்படியோ போகட்டும், நீ வந்ததே நல்லதா போச்சு. உன் அண்ணி உன் கிட்ட ஏதோ கேட்கனுமாம்,” என்றான் சரத்.
“ஆமாம் உதய், வா வா... உனக்காக தான் காத்துகிட்டே இருந்தேன்,” என்ற துளசி கணவன் பக்கம் பார்த்து,
“நீங்க போய் ஆஃபிஸ்க்கு கிளம்புங்க...” என்றாள்.
உதயை பாவமாக பார்த்த சரத்,
“பாவம் துளசி அவன்...” என்றான்.
“என்ன இரண்டுப் பேரும் ரொம்ப பில்ட் அப் கொடுக்குறீங்க. அண்ணி எதுவா இருந்தாலும் சாப்பிட்டுட்டே பேசலாம். உங்க ஸ்பெஷல் வடகறி இன்னைக்குன்னு கேட்டதில் இருந்து டெம்டேஷன் தாங்க முடியலை. அம்மா கிட்ட சொல்லிட்டு எஸ்கேப் ஆகி ஓடி வந்திருக்கேன். வாங்க ஃபர்ஸ்ட் எனக்கு பரிமாறுங்க. இட்லியா, தோசையா?” கேட்டுக் கொண்டே உதய் டைனிங் டேபிள் பக்கம் செல்லவும், துளசியின் முகம் மலர்ந்தது.