துளசி தோழியை மெல்ல கண்டிக்க, காமாட்சி அதைப் பற்றி கவலை படாமல், "அது பரவாயில்லை, ஆனால் அதென்ன 'ஒசிமம்'ன்னு துளசியை கூப்பிடுற????? அப்படின்னா என்னன்னு சொல்லு?" என்றாள்.
"அது வேற ஒன்னும் இல்லை ஆன்ட்டி, துளசி செடியோட பொட்டனிக்கல் பேரு ஒசிமம்ன்னு (ocimum) தொடங்கும். அதனால உங்க துளசியோட செல்ல பேரும் ஒசிமம்!"
"ஓஹோ!"
"அத்தை, இவ கூட நின்னவங்களை தப்பா நந்துன்னு நினைச்சுட்டீங்களா என்ன? நீளமா முடி இருக்குன்னு சொன்னீங்களே?"
"ஆமாம், உன் ஃப்ரென்ட் என்பதால உன்னை போலவே சாரீ கட்டிட்டு வருவான்னு நினைச்சேன்..."
நந்திதா பளிச்சென்று புன்னகை செய்தாள்!
"சாரீ கட்டலாம் ஆன்ட்டி, ஆனால் எனக்கு அதை நிமிஷத்திற்கு ஒரு தரம் அட்ஜஸ்ட் செய்துட்டே இருக்கனும்... எதுக்கு ரிஸ்க்ன்னு ஜீன்ஸ் இல்லன்னா சுடி தான் நான் எப்போதும் யூஸ் செய்றது..."
"பரவாயில்லை நந்திதா! துளசி தான் பழைய காலத்தைப் போல புடவைலேயே சுத்திட்டு இருக்கா, நீயாவது கண்ணுக்கு குளிர்ச்சியா ஜீன்ஸ் போடுறீயே சந்தோஷம்!"
துளசி காமாட்சி பக்கம் ஒரு பார்வை பார்த்தாள்! நந்திதாவோ சிரித்தாள்!
"ஆன்ட்டி, ஒசிமம் உங்களை பத்தி சொன்னது தப்பே இல்லை! நீங்க சூப்பர் வுமன் தான்!"
"அதுக்குள்ளே நீங்க இரண்டு பேரும் ஒரு சைட் ஆகிட்டீங்களா?" என்றாள் துளசி பொய்யான கோபத்துடன்!