புரிந்து கொண்டவற்றை வைத்து உதயின் மீது அவளுக்கு இருந்த மதிப்பு பெரிதும் அதிகமாகி இருந்தது.
பொதுவாக பெண் குழந்தைகள் பலருக்கும் அவர்களுடைய அப்பா தான் முதல் ஹீரோ! ஒரு டிவி விளம்பரத்தில் வருவது போல, அப்பா சூப்பர்மேன், ஸ்பைடர்மேனாக இல்லாமல் போனாலும் தன் குழந்தைக்கு எனும் போது ‘beyond the best’ செய்பவர்.
நந்திதாவிற்கும் அவளுடைய அப்பா தான் முதல் சூப்பர் ஹீரோ!
அந்த நிறுவனத்தை பொறுத்த வரை உதய் அதே போன்ற சூப்பர் ஹீரோவாக இருந்தான். அவன் நிறுவனத்தை நிர்வகிக்கும் முறையும், திறமையும், பணி புரிபவர்களின் மீது அவனுக்கு இருந்த அக்கறையும்...
தவறுகள் நடக்கும் போதும் டென்ஷன் ஆகி எரிந்து விழுந்து கத்தாமல், பொறுமையாக ஏன் என்ன என்று விசாரித்து கையாளும் அவனின் பாங்கும் நந்திதாவை பெரிதும் கவர்ந்தன...
இத்தனைக்கும் உதய் எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தான் என்று சொல்ல முடியாது... ஒவ்வொரு துறைக்கும் வேண்டிய சுதந்திரத்தையும் கொடுத்திருந்தான்...
நந்திதாவிற்கே புரியாத வகையில், பல முறை அவளையும் அறியாமல் அவளின் மனம் உதயிடம் அவளின் அப்பாவின் பாங்கை கண்டது... அவரும் கூட இப்படி தான்... அவர் உருவாக்கி நடத்திய நிறுவனம் என்றில்லாமல் வீட்டிலும் மனைவி, மகளிடமும் கூட இப்படி தான்...
உதய் நல்லவன், சிறந்த பண்பு உள்ளவன், நல்ல நிர்வாக திறமை கொண்டவன் என்பது நந்திதாவின் மனதில் பதிந்து போயிருந்தது...
அவ்வப்போது துளசியிடம் மட்டும் உதய் பற்றி புகழ்வாள்... துளசி ஆம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் மறுக்காமல் அமைதியாக தோழி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பாள்...