Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கமல் அங்கிருந்து போய் விட்டதை உறுதி செய்துக் கொண்டு, “தேங்க்ஸ் அண்ணி...” என்றாள் கவிதா உண்மையான நன்றி உணர்வுடன்...
“இதுக்கு எதுக்கு கவி தேங்க்ஸ் எல்லாம்...” என்ற சுமித்ரா, பூங்கோதை பக்கம் பார்த்தாள்... பூங்கோதை கமல் ஏறி சென்ற படிக்கட்டுகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“போ கவி, போய் படி...” என்று கவிதாவை அங்கே இருந்து அனுப்பி விட்டு, மீண்டும் மாமியார் பக்கம் பார்த்தாள் சுமி. அவள் இப்போதும் படிகளை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன அத்தை, என்ன ஆச்சு? தினமும் நடக்குறது தானே... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க??”
“எதுக்கு அவரைப் பத்தி பேசின சுமி?’
“யார், மாமாவை பத்தியா??? அவரை பத்தி சொன்னதால பி.பி எகிறி தான் உங்க பிள்ள கவிதாவை விட்டுட்டு மாடிக்குப் போனார்... இல்லைனா, இன்னும் இங்கே நின்னு குதிச்சிட்டு இருப்பார்...”
பூங்கோதை சுமிதிராவின் கரத்தை பரிவுடன் பற்றினாள்...
“நீ எனக்கு மகளா பிறந்திருக்க வேண்டியவ சுமி.... இந்த பையனை உனக்கு கல்யாணம் செய்து வச்சதை நினைச்சு சந்தோஷப் படுறதா இல்ல வருத்தப் படுறதான்னு தெரியலை... உன் மாமா கொஞ்சம் பொறுப்பானவரா இருந்திருந்தா பிரச்சனையே இல்லை... இவன் இப்படி ஹிட்லரா மாறி இருக்கவும் வேண்டாம்... அவரோட குடி பழக்கம் தான் எல்லாத்துக்கும் காரணம்... கமல் பதினெட்டு வயசுல இருந்து குடும்பத்தை கவனிக்குறான்... அவன் ஹிட்லரா இருந்தாலும் கூட அவனால தான் இந்த குடும்பம் குடும்பமா இருக்கு...”
இது எல்லாம் சுமித்ராவிற்கு தெரிந்த விஷயங்கள் தான்...
இருந்தாலும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்...