“எல்லாம் இருக்கு உதய்...” என்றவள் மேலே தாமதிக்காமல் மும்முரமாக வேலையில் இறங்கினாள்.
நல்ல வேளையாக அவளின் கோட் இருக்கும் சிப்களை (chip) டெஸ்ட் செய்யும் கிட்டையும் அங்கே அனுப்பி இருந்தாள்...
ஒவ்வொரு சிப்பாக டெஸ்ட் செய்து... அதை ஒவ்வொன்றாக இணைத்து... சிறு சிறு பகுதிகளாக மீண்டும் டெஸ்ட் செய்து....
நந்திதா மும்முரமாக வேலை செய்ய, நேரம் வேகமாக சென்றது...
உதயும், நாகுவும் அவர்களின் ஸ்டால் பக்கம் வந்தவர்களுக்கு டெமோ இல்லாமல் நந்திதாவின் ஜர்னல் கொண்டு அவர்களின் புதிய சிப்பை விளக்கினார்கள்...
அவர்கள் சந்திக்க காத்திருந்த அமெரிக்க கம்பெனியின் பிரதிநிதிகள் கண்ணில் படவும், உதய், நாகுவிடம் சொல்லி விட்டு நந்திதாவின் அருகே வந்தான்.
“நந்திதா, ரெடியா?? நாம வெயிட் செய்துட்டு இருக்க டெலிகேட்ஸ் வந்தாச்சு... ஆஸ்க் சொல்யுஷன்ஸ் ஸ்டால்ல இருக்காங்க, அடுத்து நம்ம கிட்ட தான் வர போறாங்க...”
“எல்லாம் கனக்ட் செய்தாச்சு உதய்... தனி தனியா டெஸ்ட் செய்தேன் ஆனால் முழுசா டெஸ்ட் செய்யலையே... இப்போ பவர் கனக்ட் செய்து ஏதாவது தப்பா போனால்... எல்லாம் புகைஞ்சுப் போயிடுமே....”
அவளுக்கு நம்பிக்கை கொடுப்பவன் போல மேஜை மீதிருந்த அவளின் கையை மெல்ல பற்றி அழுத்தினான் உதய்.
“கவலைப் படாதீங்க! டெமோ வொர்க் ஆகலைனா தியரி வச்சே சமாளிப்போம்... இவ்வளவு நேரமா நானும் நாகுவும் அதை தானே செய்றோம்... ரிலாக்ஸ்...”