இந்த உலகில் அவனுக்காக இருக்கும் ஒரே தோழி... அவனை முழுவதுமாக தெரிந்துக் கொண்ட, புரிந்துக் கொண்ட ஒரே ஜீவன்...
அவள் தான் அவனின் உயிர்....!
அவளுக்காக ஏதேதோ செய்ய வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது.... கடமைகள் முடியட்டும் அவளை முடி சூடா ராணியாக வைத்து பார்க்க வேண்டும்....
மனைவி மீது காதல் கசிந்துருக, கண்களில் கனவு மின்ன நின்றிருந்தவனுக்கு, அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட வரும் புயலை பற்றி தெரிந்திருக்கவில்லை...!
❀✿❀✿❀✿
"நான் என்ன வீட்டுல வெட்டியாவா இருக்கேன்? காலைல இருந்து வேலை செய்துட்டு வீட்டுக்கு வந்தா இங்கேயும் வந்து வேலை செய்யணுமா? என்ன அநியாயமா இருக்கு???"
மூச்சு விடாமல் கத்திய இளைய மருமகள் ரோஷ்னியை எரிச்சலாக பார்த்தாள் பூங்கோதை...
"இங்கே பாரும்மா, இது நாம முன்னாடியே பேசி முடிவு செய்தது தானே? எல்லா வேலையும் சுமியே செய்றா... இந்த பாத்திரம் துலக்குற வேலையை மட்டும் தானே உன்னையும் செய்ய சொல்றது??? அதுவும் கூட கஷ்டமா??? அப்படி பார்த்தா சுமி எவ்வளவு வேலை செய்றா??"
"சுமி சுமி சுமி... இதே தான் எப்போவும்!! அவங்க அதை செய்றாங்க, இதை செய்றாங்கனா, என்னை மாதிரி மாசம் ஆனால் சோலயா சம்பளம் வருதா???"
ரோஷ்னி மேலும் குரலை உயர்த்திக் கத்த, அது வரை கையை பிசைந்துக் கொண்டு நின்றிருந்த அவளின் கணவன் விமல்,
"மெதுவா பேசு ரோஷ்னி, அண்ணாக்கு கேட்க போகுது..." என்றான்.