இரண்டு மாடிகளை கொண்ட வீடு அவர்களுடையது...
இரண்டாவது மாடியில் கமல் – சுமித்ரா வசிக்க, முதல் மாடியில் விமல் – ரோஷினி வசித்தனர்.
கீழ் பகுதியை பூங்கோதை, அவள் கணவர் சரவணன், மற்றும் கவிதா பயன்படுத்தினார்கள்...
பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை சரவணன் நல்ல விதமாக தான் இருந்தார். அந்த காலத்தில் கட்டிய வீடு தான் இது... நண்பர்களுடன் சேர்ந்து சிறிதாக ஆரம்பித்த குடி பழக்கம், சரவணனை எதற்கும் உதவாதவராக மாற்றும் அளவிற்கு முற்றிப் போயிருந்தது...
கணவனின் குடிப் பழக்கத்தை மாற்ற பூங்கோதையும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாள், ஆனால் ஒரு பலனும் இல்லை... அதட்டினாலும், கெஞ்சினாலும், கொஞ்சினாலும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் மது அருந்தாவிட்டால் சரவணனின் கைகள் வெடுவெடுவென நடுங்கும்... நாக்கு குழறும்...
குடிக்கு முழு அடிமையாகி இருந்ததால் அது இல்லாமல் அவரால் இருக்க முடியாத நிலைமையை எட்டி இருந்தார்.
அந்த குடி பழக்கத்தை காரணமாக சொல்லி சரவணனை வேலையில் இருந்து நீக்கம் செய்த போது பூங்கோதை திகைத்துப் போனாள். அவளுக்கு பெரிய அளவில் படிப்பு இல்லை... வேலையும் இல்லை... மூன்று குழந்தைகளுடன் என்ன செய்வது என்று அவள் திகைத்த நின்ற நேரத்தில், அவள் கேட்காமலே முழு குடும்ப பொறுப்பையும் எடுத்துக் கொண்டான் கமல்.
கல்லூரி படிக்கும் போதே பல பார்ட் டைம் வேலைகளை செய்ய தொடங்கினான்...
தம்பி, தங்கையை கண்டிப்புடன் வளர்த்தான்...
பூங்கோதையை சிக்கனமாக செலவு செய்ய வைத்தான்...