இருந்தது. மற்றவர்கள் அனைவரும் முகத்தை தூக்கி வைத்திருந்தாலும் சுமித்ரா மட்டும் எப்போதுமே அதே புன்னகையுடன் ரோஷினியிடம் பேசுவாள், பழகுவாள்... பெரிய சண்டையே நடந்திருந்தால் கூட ரோஷினியிடம் சுமித்ரா கோபப் பட்டதே இல்லை!
இதனாலேயே மற்றவர்களை தூக்கி எறிந்து பேசினாலும் சுமித்ராவிடம் மட்டும் ரோஷினி தண்மையுடனே நடந்துக் கொண்டாள்!
ரோஷினியின் யோசனை பற்றி தெரியாமல் துணிகளை விரித்துப் போட்டுக் கொண்டிருந்த சுமித்ரா, கமலின் சட்டையை காயப் போட கையில் எடுக்கவும், அவளின் முகத்தில் இருந்த புன்னகை தானாக விரிந்தது...
எத்தனை வருடங்கள் ஆனால் என்ன... அவளின் கமல் அவளுக்கு ஸ்பெஷல் தான்... வயதான பின்பும் கூட அப்படி தான்...
திடீரென வயிற்றில் சிறிதாக கூரிய வலி தோன்றியது...
என்ன இது என்று அவள் யோசிக்கும் போதே, அடிவயிற்றில் எழுந்த வலி தீவிரமடைய, மெல்ல சமாளித்து நின்றாள் சுமித்ரா...
அவளையே அப்போதும் கவனித்துக் கொண்டிருந்த ரோஷினி, பக்கத்தில் வந்து அவளை தாங்கி பிடித்தாள்....
“என்ன ஆச்சு? சாப்பிடாம வந்துட்டீங்களா??”
ரோஷினியின் அக்கறையான கேள்வி ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல்,
“இல்லப்பா... திடீர்னு வயிறு வலிக்குற மாதிரி இருந்தது...” என்றாள் சுமித்ரா.
“ஓ... பார்த்துக்கோங்க... கீழே விழுற மாதிரில போனீங்க...”