Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 06 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சுட்டெரிக்கும் வெயிலை மனதினுள் பழித்தப்படி கையில் குடையுடன் நடந்தாள் சுமித்ரா.
அவளின் தோழி ஹேமாவின் ‘கெட் வெல்’ ஹாஸ்பிட்டல் கண்ணில் தெரிந்த உடன் அவளுக்கு ‘ஹப்பாடா’ என்றிருந்தது.
சுமித்ராவை பார்த்ததும் நட்புடன் புன்னகைத்து வாசல் கேட்டை திறந்து விட்டார் வாட்ச்மேன்.
ஹேமாவும் சுமித்ராவும் நெருங்கிய தோழிகள் என்பது அங்கே வேலை செய்யும் பலருக்கும் தெரிந்த விஷயம்.
நடக்கும் போது ஆங்காங்கே எதிர்பட்ட பரிச்சயமானவர்களின் புன்னகையை இயல்பாக எடுத்து பதிலுக்கு புன்னகைத்தப் படி நேராக ஹேமாவின் ஒய்வு அறைக்கு சென்றாள் சுமித்ரா.
அங்கே ஹேமா மேஜையின் மீதிருந்த டிஃபன் பாக்ஸை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன டாக்டரம்மா டிஃபன் பாக்ஸை பார்த்து இப்படி முறைக்குறீங்க???”
சுமித்ராவின் குரல் கேட்டு நிமிர்ந்த ஹேமாவின் முகம் பளிச்சிட்டு மின்னியது.
“சுமி... ஒரு வழியா வந்தீயா... வா வா... பசிக்குது... இன்னைக்கும் என் சாப்பாடே சாப்பிட வேண்டி வந்திருமோன்னு யோசிச்சிட்டு இருந்தேன்... சீக்கிரம் அந்த டப்பா எல்லாம் தா...”
“அடிப்பாவி... எனக்காக வெயிட் செய்தியாக்கும்ன்னு பார்த்தா, நீ இப்படி சாப்பாட்டுக்கு அலையுற...”
“சும்மா இரு சுமி... உனக்கு ஒன்னும் தெரியாது...” என்ற ஹேமா, சுமித்ரா மேஜை மீது வைத்த டப்பாக்களை திறந்து ஒவ்வொன்றிலும் இருந்து கொஞ்சம் எடுத்து தட்டில் வைக்க தொடங்கினாள்.