தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 20 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கண்களை மூடிக் கொண்டு மேலும் சில வினாடிகள் காற்றில் கலந்திருந்த அவனின் நதியின் வாசத்தை சுவாசித்து ரசித்த உதய், பின் ஒரு வழியாக காரில் இருந்து இறங்கி நடந்தான்...
மழை கொட்டோ கொட்டென்று பெய்துக் கொண்டிருந்தது...
மழைக்கும் அவனின் காதலுக்கும் தொடர்பிருக்கிறதே...
நதியை முதல் நாள் அவன் பார்த்ததும் மழை நாளில் தானே!!!!
அன்றைய நாளை மனதில் நினைத்து ரசித்தப் படி, மழையில் நனைந்துக் கொண்டே நடந்தான் அவன்...
“உதய்! என்னடா கோலம் இது??? காரை பார்க் செய்துட்டு வரதுக்குள்ளேயா இப்படி தொப்பலா நனைஞ்ச?” காமாட்சி அவனின் கோலத்தை கண்டு வினவினாள்.
“ஆமாம் பெரியம்மா, மழையை ரசிச்சிட்டு வந்தேன்...” என்றான் உதய் சின்ன புன்னகையுடன்.
“என்ன பையன்டா நீ...” என்ற காமாட்சி, துளசி இருந்த பக்கம் பார்த்து, சத்தமாக, “துளசி, உதய்க்கு டவல் ஒன்னு கொடும்மா... எப்படி நனைஞ்சிட்டு வந்திருக்கான் பாரு...” என்றாள்.
“டவல் மட்டும் இல்ல அத்தை, உதய்காக மாடியிலே ரூமே ரெடி செய்திருக்கேன்... சார் இன்னைக்கு இங்கே தங்கிட்டு போகட்டும்...” என பதில் சொன்ன துளசி, உதயிடம், “டவல் ரூமிலேயே இருக்கு உதய்...” என்றாள்.
“இல்லண்ணி நான் ஸ்டே செய்ற ஐடியால வரலை...”
“சும்மா இரு... அதெல்லாம் அப்புறம் பேசலாம், முதல்ல போ போய் தலையை துவட்டிட்டு வா...”
உதய் மாடிக்கு செல்ல படி நோக்கி செல்ல, துளசி அவசரமாக அவனருகே வந்தாள்...