“சார், என் பொண்ணுக்கு ஆபரேஷன் செய்யலைனா உயிர் பிழைக்குறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க சார்... உங்களால முடிஞ்ச அளவுக்கு ஏதாவது உதவி செய்ங்க சார்... ஹாஸ்பிட்டல் பேர், டாக்டர் பேரு எல்லாம் இங்கே இருக்கு... விசாரிச்சுட்டு அப்புறம் கூட உதவினால் போதும் சார்... என் பொண்ணுக்கு பதினோரு வயசு தான் சார் ஆகுது... தயவு செய்து உதவுங்க சார்...”
அவனின் உருவமும், குரலும், கெஞ்சலும் கல்லையும் கரைக்க கூடிய விதமாக இருந்தது.
அவன் கெஞ்சிக் கொண்டிருந்த நேரம் சுந்தரம் அந்த பெரிய கேட்டை முழுக்க திறந்திருந்தான்.
நன்கொடை கேட்டு கெஞ்சிக் கொண்டிருந்தவனை பாவம் என்ற பாவனையுடன் பார்த்துக் கொண்டிருந்த டாக்சி டிரைவரின் தோளை அலட்சியமாக தட்டி, வண்டியை எடுக்குமாறு சைகை செய்தான் மித்ரன்.
நம்ப முடியாமல் டிரைவர் பார்க்கவும்,
“சீக்கிரம் வண்டியை எடுப்பா...” என்று அவசரப்படுத்தினான் மித்ரன்.
மேலே எதுவும் கேட்காமல் டாக்சியை கிளப்பி அந்த பங்களாவின் வாசல் அருகே சென்று நிறுத்திய டாக்சி டிரைவருக்கு மனம் கடுத்தது.
இவ்வளவு பெரிய வீடு இருந்து என்ன புண்ணியம், உதவி செய்ய மனம் இல்லையே!! ச்சே என்ன மனிதர்கள்!
அவனின் ஆராய்ச்சியை பற்றி யோசிக்காமல் டாக்சியில் இருந்து இறங்கிய மித்ரன், மூன்று ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து டிரைவரிடம் கொடுத்து,
“கீப் தி சேன்ஜ்...” என்று சொல்லி விட்டு நடந்தான்.