Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 04 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சரண்யாவின் முகத்திலும் பதற்றத்துடன் இப்போது கவலையும் கலந்துக் கொண்டது!
"ஆபரேஷன் செய்ய எவ்வளவு ஆகும்னு சொல்றாங்க?"
"நாலுல இருந்து பத்து லட்சம் வரைக்கும் ஆகலாம்னு சொல்றாங்க..."
"ஓ!"
"என்ன செய்றதுன்னே புரியலை அண்ணி..."
சரண்யாவிற்கும் புரியவில்லை தான்!
❀✿❀✿❀✿
தன்னுடைய ஆஃபிஸ் அறையில் அமர்ந்திருந்த சரண்யாவின் மனதினுள் கற்பகத்தின் உடல்நிலை குறித்து சுரேஷ் சொன்னதே மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.
கற்பகத்தின் ஆபரேஷனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று அவளுக்கு ஆசை இருந்தது... ஆனால் அவள் இப்போது இருக்கும் நிலையில் ஆசை மட்டும் தான் பட முடியும்...
இருந்தாலும் அவளின் மனம் கேட்க மறுத்தது! அங்கே மருத்துவமனையில் இருப்பது அவளின் கோபியை பெற்றவள்... கோபிக்கு அம்மாவின் மீது எப்போதுமே பாசம் அதிகம்...
அவ்வப்போது பேசும் போது அவனையும் அறியாமலே பல முறை அவனின் அம்மாவை பற்றி சொல்வான் அவன்...
"சரண்யா... சரண்யா... என்ன ஆச்சு?"
சேகரின் குரல் உரத்து ஒலிக்க, சிந்தனையில் இருந்து விடுபட்டு எதிரே கேள்வியுடன் நின்றிருந்த சேகரை பார்த்து புன்னகைக்க முயன்றாள் சரண்யா...