மெஷின்கள் இருக்கும் இடம் முடித்து பேக்கேஜிங் நடைபெறும் பக்கம் அவர்கள் செல்ல, அங்கே மித்ரனை விட்டு விட்டு சரண்யாவிற்கு உட்கார முதலில் நாற்காலியை தந்தார்கள்.
ம்மா, க்கா, மேடம் என்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்களுடன் நல விசாரிப்புகளும், கொஞ்சல்களும் வேறு!
சரண்யா அவர்கள் அனைவரிடமும் வெகு இயல்பாக ஒரு தோழியை போல, அவர்களின் வீட்டில் ஒருத்தியை போல பழகியதால் அவர்கள் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பது புரிந்ததோ இல்லையோ, மித்ரனுக்கு ஒரு விஷயம் தெள்ள தெளிவாக புரிந்தது...
சரண்யா இருக்கும் வரை அவன் அங்கே ‘தலை’ ஆக இருக்க முடியாது! அங்கே வேலை செய்பவர்களுக்கு அவள் இன்னமும் ‘தலை’ தான்...
ஒரே நேரத்தில் இரண்டு ‘தலை’கள் இருக்க முடியாது... இருக்கவும் கூடாது! இது உடனடியாக அவன் சீர் செய்ய வேண்டிய பிரச்சனை!
முடிவெடுத்தானோ இல்லையோ, அதன் பின் வேண்டுமென்றே மற்றவர் முன் சரண்யாவிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டு சுள்ளென்று எரிந்து விழுந்தான்!
மித்ரனின் மனதில் ஓடிய யோசனை பற்றி அவனுடைய கடு கடு முகத்தை பார்த்து தெரிந்துக் கொள்ள முடியா விட்டாலும், சரண்யாவிற்கு ஒன்று புரிந்தது... இவனுக்கு கீழே வேலை செய்வது என்பது சுலபமாக இருக்க போவது இல்லை...
மூன்று மணி நேரத்திலேயே பல மணி நேரம் வேலை செய்தது போல சோர்ந்து போயிருந்தாள் அவள்...
மித்ரனின் கடுமையும், கோபமும், மற்றவர் இருப்பதை பற்றி யோசிக்காமல் எரிந்து விழும் மனோ பாவமும்... நினைக்கும் போதே அவளுக்கு கண்ணை கட்டியது...